நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா நிலையில் திடீர் பல்டி

மும்பை

பாஜக அரசுக்கு நம்பிக்கை அளிக்க வாக்களிக்க உள்ளதாக தெரிவித்திருந்த சிவசேனா திடிரென மாறி உள்ளது.

மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடத்த்ப்பட்டு அதன் பிறகு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.  பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக பல எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.   அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் பாஜக வை ஆதரிக்கும் என தெரிய வந்துள்ளது.

பாஜகவின் நீண்ட நாள் நட்புக் கட்சியான சிவசேனாவுடன் தற்போது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.   பாஜகவின் பல நடவடிக்கைகளை சிவசேனா கடுமையாக விமர்சித்து வருகிறது.   ஆனால் சிவசேனாவுடன் உறவை மீண்டும் புதுப்பிக்க பாஜக கடும் முயற்சி எடுத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று சிவசேனா கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக அதாவது பாஜகவை ஆதரித்து வாக்களிக்கும் என அறிவித்தது.  இதை ஒட்டி இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள அரசியல் போர் முடிவுக்கு வந்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதினர்.  ஆனால் தற்போது தனது முடிவை திடீரென சிவசேனா மாற்றி உள்ளது

இது குறித்து சிவசேனாவின் தலைவர்களில் ஒருவரான சந்திரகாந்த் , “முன்னதாக தெரிவித்திருந்தபடி கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் நாள் முழுவதும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.  இறுதி முடிவை உதவ் தாக்கரே விரைவில் அறிவிப்பார்.   அதன் படி உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.