பல்லக்கு தூக்கியது போதும்! இனி முதலமைச்சர் பதவி நமக்குதான்! கட்சி எம்எல்ஏக்களுக்கு உற்சாகம் தந்த உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிர அரசியலில் மற்றவர்களுக்கு பல்லக்கு தூக்கியது போதும், இனி சிவசேனாவை சேர்ந்தவர் முதலமைச்சர் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று அதன் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிர அரசியல் களம் இன்னும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நகர்த்தல்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. பாஜக, சிவசேனா கூட்டணியில் யார் முதலமைச்சர் என்ற சர்ச்சைக்கு  தீர்வு கிடைத்தபாடில்லை.

சிவசேனா கட்சிக்கு முதலமைச்சர் பதவி என்ற பிடிவாதத்தை பாஜக ரசிக்கவில்லை. ஆட்சி அமைக்கவும் முடியவில்லை. பெரும்பான்மைக்கான இடங்கள் இல்லாத நாளையுடன் ஆளுநர் கொடுத்த கெடு முடிகிறது.

இதையடுத்து, ஆட்சியமைக்கப் போவதில்லை என்று ஆளுநர் அழைப்பை பாஜக நிராகரித்து இருக்கிறது. இந்த நிலையில், சிவசேனா எம்எல்ஏக்களை சந்தித்த அதன் தலைவர் உத்தவ் தாக்கரே, இனி பல்லக்கு தூக்கியது போதும், சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவி என்று கூறியிருக்கிறார்.

மலாட் பகுதியில் தமது கட்சி எம்எல்ஏக்களை சந்தித்த அவர், மகாராஷ்ராவில் சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவி என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவோம்.

மற்றவர்களுக்கு பல்லக்கு தூக்கியது போதும். இனி சிவசேனாவை சேர்ந்த ஒருவர்தான் மகாராஷ்டிரா முதலமைச்சராக வருவார் என்று நம்பிக்கை அளித்திருக்கிறார்.