பாக் பற்றிய பேச்சு : மோடி மீது சிவசேனா கடும் தாக்கு

மும்பை

குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பாக் பற்றி கூறியதற்கு சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது.

பிரதமர் மோடி காங்கிரஸ் மூலமாக குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுவதாக பேசியது கடும் பரபரப்புக்குள்ளாகியது.   இது குறித்து பலரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த விமர்சனத்துக்காக மோடி மன்னிப்பு கோர வேண்டும் என கூறி உள்ளார்.   பாகிஸ்தானும் மோடியின் இந்தப் பேச்சுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

பாஜக வின் மிக நெருங்கிய நண்பன் எனக் கூறப்படும்  சிவசேனா கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகையான சாம்னா ஒரு தலையங்கத்தை வெளியிட்டுள்ளது.  அதில், “காங்கிரசையும் பாகிஸ்தானையும் பற்றி தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசியது கடும் கண்டனத்துக்குரியது  இதன் மூலம் பாஜக வின் தேர்தல் பிரசாரம் தரம் தாழ்ந்து விட்டது.   தேர்தலில் வெற்றி பெற எதையும் பேசலாம் என அவர் எண்ணுவதையே இது காட்டுகிறது.  பிரதமர் பதவியில் உள்ளவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர இது போல புகார் தெரிவிக்கக் கூடாது.

மேலும் தற்போதுள்ள நிலையில் மோடிக்கு காஷ்மிரை விட சீனா ஊடுருவும் லடாக் பகுதிகளை விட குஜராத் முக்கியமாக தெரிகிறது.    ஒவ்வொரு தேர்தலிலும் பாகிஸ்தானைப் பற்றியும் அதன் மூலமாக தலைமறைவாக உள்ள டான் ”தாவூது இப்ராகிம்” தலையிடுகிறார் என்பதைப் பற்றியும் மோடி சொல்வதை நிறுத்த வேண்டும்.    மோடி புகார் கூறுவதை நாடு விரும்ப வில்லை.  நடவடிக்கை எடுப்பதையே விரும்புகிறது.   இன்னும் எத்தனை நாட்கள் நீங்கள் பாகிஸ்தானின் பெயரையே சொல்லிக் கொண்டிருப்பீர்கள்?   மூத்த தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா மற்றும் நானா படோல் போன்றோரே தங்களின் எதிர்ப்பை குறைத்துக் கொண்டுள்ளனர்” எனக் கூறி உள்ளது.