காஷ்மீர் விவகாரம் : பாஜகவுக்கு சிவசேனா கடும் தாக்கு

மும்பை

காஷ்மீரில் மெகபூபாவுக்கு பாஜக ஆதரவை விலக்கிக் கொண்டதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் முதல்வர் மெகபூபா முக்திக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றதால் அரசு கவிழ்ந்தது.   மெகபூபா ராஜினாமா செய்தார்.   அங்கு ஜனாதிபதி ஆட்சி அமுலாக்கப்பட்ள்ளது    பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.    அத்துடன் பாஜகவின் முன்னாள் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிவசேனாவின் குரல் எனக் கூறப்படும் சாமனா பத்திரிகையில்  “காஷ்மிர் பிரச்னைக்கு தீர்வு காணவே பாஜகவை மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள்.  ஆனால்  அதன் பிறகு அங்கு வன்முறை அதிகரித்துள்ளது.   ராணுவ வீரர்கள் மடிவது அன்றாட செய்தி ஆகி விட்டது.  இதற்கு மத்தியில் ஆளும் பாஜகவே காரணம் ஆகும்.  ஒரு நாட்டை வழி நடத்துவது சிறுபிள்ளை விளையாட்டு அல்ல.  ஆனால் பாஜகவின் பேராசையால் காஷ்மீர் மக்கள் அவதியுறுகின்றனர்.

காஷ்மீரில் முன் எப்போதையும் விட இப்போது வன்முறை அதிகரித்துள்ளது.   ஆனால் அதற்கு மாநில அரசை காரணம் காட்டி பாஜக ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது.     இப்போதுள்ள வன்முறைக்கு பாஜக தான் காரணம் என்பதை மக்களிடமிருந்து மறைக்க இவ்வாறு நடந்துக் கொண்டுள்ளது.   தனக்கு நல்ல பெயர் வரவேண்டும் என்னும் பேராசையால் பாஜக ராணுவ வீரர்களை பலி கொடுக்கிறது.” என தெரிவித்துள்ளது.