டெல்லி: மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா விதித்த நிபந்தனைகள் ஏற்கத்தக்கதல்ல என்று பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறியிருக்கிறார்.


மகாராஷ்டிராவில் யாரும் ஆட்சியமைக்க முடியாததால், தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலில். பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனாவின் பிடிவாதத்தால் அரியணை ஏற முடியவில்லை.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா தற்போது தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார்.


இந் நிலையில் சிவசேனாவின் ஏற்க முடியாத நிபந்தனைகளே ஆட்சிமைக்க முடியாமல் போனதற்கு காரணம் என்று பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்து இருக்கிறார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்பாக பிரச்சாரத்தின் போது, முதலமைச்சர் தேவந்திர பட்னவிஸ் தான் பிரதமர் மோடியும், நானும் பல முறை அறிவித்தோம்.


அப்போது யாரும் அதற்கு அதிருப்தி தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது புதிய நிபந்தனைகளுடன் அவர்கள் (சிவசேனா) அணுகுகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை எங்களால் ஏற்கமுடிய வில்லை.
கூட்டணி பேச்சுவார்த்தையின் போது பேசியது என்ன? நடந்தது என்ன? என்று கூறுவது எங்கள் வழக்கம் கிடையாது. சிவசேனாவால் முடிகிறது என்றால் அவர்கள் நினைத்துவிட்டு போகட்டும். அதன் மூலம் மக்களின் பரிதாபத்தை பெற்றுக் கொள்ளட்டும்.


ஆட்சியமைக்க அனைத்து கட்சிகளுக்கும் 18 நாட்கள் என சமவாய்ப்பு அளிக்கப்பட்டது. இது எந்த மாநில அரசியலிலும் இதுநாள் வரை வழங்கப்பட்டது கிடையாது.
மாநில அரசின் நாட்கள் முடிந்த பிறகு தான், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தார். அதன் பின்னரே ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இப்போது கூட யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதோ, அவர்கள் அணுகலாம் என்றார்.