சிவசேனா கூட்டணி முறிவு… மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சிக்கு ஆபத்து

மும்பை:

மும்பை மாநகராட்சி உள்பட 10 மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து சமிதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. மும்பை மாநகராட்சியை பொறுத்தவரை சிவசேனா- பா.ஜனதா கட்சிகள் கூட்டணி வைத்து செயல்பட்டன.

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்றுமுன்தினம் அறிவித்தார். இதனால் மும்பை மாநகராட்சி தேர்தலில் அக்கட்சிகள் இடையேயான 25 ஆண்டுகால கூட்டணி திடீரென முறிந்தது. இரு கட்சிகளும் கடந்த சட்டசபை தேர்தலை போல் மும்பை மாநகராட்சி தேர்தலையும் தனித்து நின்று களம் காண தயாராகி விட்டன.

கூட்டணி முறிவை அறிவித்த சிவசேனா பாஜ மீது குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியினர் கூறுகையில்…

இந்துத்வா மற்றும் மகாராஷ்டிரா நலன் கருதி பாஜவுடன் 25 ஆண்டுகள் கூட்டணி அமைத்திருந்தோம். வழி மாறி சென்று மதசார்பற்ற சான்றுகளை பரைசாற்றுகின்றனர். தனது காரியத்துக்காக சத்ரபதி சிவாஜி, லோக்மான்யா திலக் ஆகியோரை தேச விரோதிகள் என கூறுவதற்கு பாஜ தயங்காது. பாஜவுடன் கூட்டணி அமைத்து கால் நூற்றாண்டை வீணடித்துவிட்டோம். 25 ஆண்டுகளுக்கு முன் நடக்க வேண்டியது இன்று நடந்துள்ளது. கழுத்தை சுற்றியிருந்த இந்துத்வா என்ற கயிறு என்று தற்போது விலகியுள்ளது. இனி புதிதாக சுவாசிக்கலாம்.

சிவசேனா கூட்டணி தர்மத்தை மதித்தது. ஆனால், பாஜ தங்களது இதயத்தில் ஏமாற்று வித்தையை கொண்டிருந்துள்ளது. சத்ரபதி சிவாஜியின் கொள்கைக்கு மாற்றாக அவரது நினைவிடத்தை அரசியல் ஆதாயத்திற்காக பாஜ நிறுவ முடிவு செய்தது. மதத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை. பதவியை தக்கவைத்துக் கொள்வதிலேயே குறியாக உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

மேலும், மராட்டியத்திலும், மத்தியிலும் பா.ஜ. தலைமையிலான அரசில் சிவசேனா அங்கம் வகித்து வருகிறது. உத்தவ் தாக்கரேயின் தற்போதைய அறிவிப்பு காரணமாக மராட்டிய அரசில் இருந்து சிவசேனா வெளியேறுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாநில பா.ஜ அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைச்சரவையில் இருந்து சிவசேனா அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்து ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கருத்து கூறிய பா.ஜ மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே…

பா.ஜ தலைமையிலான மாநில அரசு தனது 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும். சிவசேனாவின் தேர்தல் கூட்டணி முறிவு முடிவு மாநில அரசின் மீது எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தா என்றார்.

இதனிடையே, சிவசேனாவின் நிலைப்பாடு குறித்து கருத்து கூறிய பா.ஜனதா தலைவர் கிரித் சோமையா…மாநகராட்சி ஊழல் மீதான கருப்பு அறிக்கையை பா.ஜ வெளியிடும் என்றார்.

இதற்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் கொடுத்த பதிலடியில்….

தெருவில் இருந்து யார் வேண்டுமானாலும் எழுந்து கேள்விகள் கேட்கலாம். மராட்டியத்தை நிலையற்ற மாநிலமாக மாற்ற விரும்பவில்லை. அதனால் தான் மாநிலத்தில் கூட்டணி இன்னும் சில காலம் தொடர விரும்புகிறோம் என்றார்.
பாஜ & சிவசேனா கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தேசியவாத வாத காங்கிரஸ் கட்சி கூர்ந்து கவனித்து வருகிறது. சிவசேனா ஆதரவை வாபஸ் வாங்கினால், எப்படி காய்களை நகர்த்துவது என்றும் அக்கட்சி திட்டமிட்டு வருகிறது.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் 2014ம் ஆண்டு நடந்த தேர்தலின் அடிப்படையில் தற்போதைய கட்சிகளின் நிலவரம்

மொத்த இடங்கள் 288

பாஜ 122
சிவசேனா 63
காங்கிரஸ் 42
தேசியவாத காங்கிரஸ் 41
பகுஜன் விகாஸ் அகதி 3
பீசன்ட்ஸ் மற்றும் ஒர்க்கர்ஸ் பார்ட்டி 3
இதர கட்சிகள் 7
சுயேட்சைகள் 7

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Shiv Sena feels they wasted quarter century in alliance with BJP threaten to bjp government, சிவசேனா கூட்டணி முறிவு மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சிக்கு ஆபத்து
-=-