முத்தலாக் போல் ராமர் கோவில் கட்ட அவசரச் சட்டம்…சிவசேனா வலியுறுத்தல்

மும்பை:

முத்தலாக் விவகாரத்தை போல ராமர் கோவில் கட்ட அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

சிவசேனா அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் ஒரு தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,‘‘இஸ்லாமிய பெண்கள் சுதந்திரமாக வாழ மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. இதற்காக முத்தலாக் நடைமுறைக்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் திருமணமான இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. இதை சிவசேனா வரவேற்கிறது. இதே வேகத்தை அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதிலும் காட்ட வேண்டும். இதற்காகவும் அவசர சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

இப்படி செய்வதால் இந்துக்களுக்கு பா.ஜ.க கொடுத்த வாக்குறுதிகளில் குறைந்தப்பட்சம் ஒன்றையாவது நிறைவேற்ற முடியும். முந்தைய பாஜக ஆட்சியில் கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமாக ராமர் கோவில் கட்ட முடியவில்லை.

ஆனால், இப்போது மத்தியிலும், அயோத்தி அமைந்துள்ள உத்தரபிரதேசத்திலும் பா.ஜ.க முழு பலத்துடன் ஆட்சி நடத்தி வருகிறது. ஆனாலும் ராமர் கோவிலை ஏன் இன்னும் எழுப்பவில்லை. இந்துக்களின் உணர்வுப்பூர்வ பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.