மகாராஷ்டிரா: பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சிவசேனா எதிர்ப்பு

மும்பை:
‘‘மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியின் நானார் பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் ஆதரவுடன் தொடங்கப்படும் இந்த திட்டத்தால் கொங்கன் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்’’ என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 4,400 கோடி டாலர் மதிப்பிலான இந்த திட்டத்தை 2019ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மறுபரிசீலனை செய்வோம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் அசோக் சவுகானின் கருத்து தலையங்க பக்கத்தின் மற்றொரு கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘‘இந்த திட்டத்தால் ஹிட்லர் ஆட்சியில் நடந்தது போல் கொத்துக் கொத்தகாக விவசாயிகள் செத்து மடிவார்கள். கொங்கன் பகுதி விவசாயிகளுக்கு பிரதமர் மோடியும், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸூம் இணைந்து கொண்டு வரும் எமர்ஜென்சியாகும். இந்த திட்டம் இல்லாமலேயே கொங்கன் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அவர்களது மகிழ்ச்சியில் விஷத்தை கலக்க வேண்டாம். இந்த திட்டத்தை தொடர்ந்தால் கொங்கன் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் எமர்ஜென்சி அமல்படுத்தியது போன்ற நிலை ஏற்படும். தைரியம் இருந்தால் செய்து பாருங்கள்’’ என்று சிவசேனா சவால் விடுத்துள்ளது.

முன்னதாக இது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் இதற்கு சிவசேனா மறுப்பு தெரிவித்துவிட்டது. ரத்னகிரியில் 15 ஆயிரம் ஏக்கரில் நானார் வளாகத்தை பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்திய ஆயில் நிறுவனம் ஆகியவை இணைந்து அமைக்கப்படுகிறது. சவுதி அரேபியாவில் அராம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தடன் இணைந்து இது செயல்படுத்தப்படவுள்ளது.

ஆண்டுதோறும் 6 கோடி டன் எண்ணெய் இங்கு சுத்திகரிக்கும் கொள்ளளவுடன் அமையவுள்ளது. 2020ம் ஆண்டில் இது செயல்பாட்டிற்கு வந்தவுடன் தினமும் 10.20 லட்சம் பேரல் குரூட் ஆயில் இங்கு சுத்திகரிப்பு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.