மகாராஷ்டிரா: பாஜக.வின் பிறந்தநாள் வாழ்த்தை புறக்கணித்த உத்தவ் தாக்கரே

மும்பை:

மகாராஷ்டிரா ஆளுங்கட்சியான பாஜக.வுக்கம், ஆட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல்களில் இரு கட்சியினரும் தனித்தனியாக போட்டியிட்டனர்.

இதனால் 2019 லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிவசேனாவை சமாதானப்படுத்த அமித்ஷா மேற்கொண்ட முயற்சியும் தோல்வி அடைந்தது. பாஜக.வை சிவசேனா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

இந்நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது 58வதுபிறந்த நாளை கடந்த 27ம் தேதி கொண்டாடினார். அவருக்கு டுவிட்டரில் எதிர்கட்சிகளும், கூட்டணி கட்சியினரும் வாழ்த்து தெரிவித்தனர். எதிர்கட்சிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்களின் வாழ்த்து டுவிட்டுக்கு சிவசேனாவில் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதேபோல் பிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் டுவிட்டரில் வாழ்த்து செய்தியை பதிவிட்டிருந்தனர். பாஜக.வுடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா சார்பில் இவர்களின் வாழ்த்து செய்திக்கு யாரும் நன்றி தெரிவித்து பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.