மும்பை

ரசு அளவுக்கு அதிகமாகப் போக்குவரத்து அபராதம் விதிப்பது  குறித்து மறுபரிசீலனை செய்ய சிவசேனை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.  இந்த சட்டத்தின்படி போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதம் 5 முதல் 10 மடங்கு வரை  அதிகரிக்கப்பட்டுள்ளது.   இந்த அபராத அதிகரிப்பால் மக்கள் கடும் துயருடவைதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.   டில்லியில் இரு சக்கரம் ஓட்டிச் சென்ற ஒருவருக்கு ரூ.23000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  அவர் தனது வாகனத்தின் மதிப்பு ரூ.15000 மட்டுமே எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அபராத அதிகரிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   ஆனால் ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனை கட்சியும் இந்த அபராதம் குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  அக்கட்சியின் சாம்னா பத்திரிகையில்,  “நாங்கள் மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரானவர்கள் இல்லை.   பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள அபராதத்தை மட்டுமே எதிர்க்கிறோம்.

ஒவ்வொரு குற்றங்களுக்குமான அபராதம் 10 மடங்கு  அதிகரித்துள்ளது.  இதனால் பலரும் இந்த சட்டத்தை எதிர்க்கின்றனர்.  இந்த அதிகப்படியான அபராத விதிப்பு ஏழை மற்றும் நடுத்தர  மக்களால் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.   இதை அரசு யோசித்துப் பார்த்ததா?   இந்த சட்டம் இயற்றப்படும் முன்பிருந்தே இந்த அபராத அதிகரிப்புக்கு எதிர்ப்பு உள்ளதால் அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தற்போது சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன.  அவற்றைச் சரி செய்யாமல் அந்த பாதையில் செல்வோரிடம் இருந்து அதிக அபராதம் வாங்குவது சரியானது அல்ல.   அதை முடித்து விட்டு புதிய சட்டத்தை அமல் படுத்தி  இருக்க வேண்டும்.   இதை ஏற்கனவே கோவா மாநில காங்கிரஸ் தலைவர்களும் சுட்டிக் காட்டி உள்ளனர். ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.