மேக் இன் இந்தியாவுக்கு விஜய் மல்லையாவை உபயோகிக்கவும் : சிவசேனா

--

மும்பை

விஜய் மல்லையாவை பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் புகழ்ந்ததால் அவரை மேக் இந்தியா விளம்பரத்துக்கு உபயோகிக்கலாம் என சிவசேனாவின் நாளேடு கிண்டல் செய்துள்ளது.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிக் கடனை திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்று விட்டார்.   அவரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை வசூலிக்க வங்கிகள் இந்திய அரசு மூலம் முயன்று வருகின்றன.  ஆனால் இன்று வரை அவரை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வர அரசால் முடியவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐதராபாத் நகரில் பழங்குடி தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்றது.   இதில் மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம் உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.  அந்த மாநாட்டில் அமைச்சர், “ பழங்குடி இன தொழில் முனைவோர் விஜய் மல்லையாவைப் போல் வங்கிக் கடன் பெற்று பெரிய தொழில் அதிபர் ஆக வேண்டும்.

விஜய் மல்லையாவை குறை சொல்வது தவறு.   அவர் ஒரு புத்திசாலி மனிதர்.  அவர் கடனைக் கட்டவில்லை எனினும் அவரால் பல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பயன் அடைந்தனர்.” என உரையாற்றினார்.   அதே பாணியில் வேறு சில பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றினர்.  இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அமைச்சர்  தனது உரைக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னவில், “பிரதமர் மோடி ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து ஊழலை ஒழிப்பதாக கூறுகிறார்.   ஆனால் அவர் கட்சியின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வங்கிக் கடனை திருப்பித் தராத விஜய் மல்லையாவை புகழ்கிறார்கள்.    மோடி பொது இடங்களில் நாவடக்கத்துடன் பேச வேண்டுமென உத்தரவிட்டும் அவர் கட்சியினர் இவ்வாறு பேசி வருகின்றனர்.

காலப்போக்கில் மும்பை வெடிகுண்டு குற்றவாளி தாவூத் இப்ராகிம் குற்றமற்ற ஒரு நல்லவர் என பேச தொடங்கி விடுவார்கள்.     விஜய் மல்லையா புத்திசாலி எனக் கூறும் பாஜகவினர் மேக் இந்தியா போன்ற திட்டங்களுக்கு விஜய் மல்லையாவை உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.   அவரை விளம்பர தூதராக நியமிக்கலாம்” என கிண்டல் செய்துள்ளது.