அலைகளை தாண்டும் படகு! நிச்சயம் வெல்வோம்! கவிதை மேற்கோள் காட்டி நம்பிக்கையூட்டிய சஞ்சய் ராவுத்

மும்பை: நிச்சயம் நாங்கள் வெல்வோம் என்று மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து சிவசேனா முக்கிய தலைவர் சஞ்சய் ராவுத் கருத்து கூறியிருக்கிறார்.
குறைந்த எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை பெற்றிருந்த போது மற்ற மாநிலங்களில் அரியணை ஏறிய பாஜகவால், மகாராஷ்டிராவில் அதை சாதிக்க முடியவில்லை.


இதற்கும் அந்த மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது பாஜக. ஆனாலும், சிவசேனாவின் பிடிவாதத்தால் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவுத் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை செய்யப்பட்டது. உடல்நலம் தேறி வரும், மகாராஷ்டிர அரசியலில் நிச்சயம் வெல்வோம் என்று நம்பிக்கையுடன் கூறி இருக்கிறார்.
புகழ்பெற்ற கவிஞரும், நடிகர் அமிதாப் பச்சனின் தந்தையுமான ஹரிவன்ஷ் ராய் பச்சனின் கவிதைகளை மேற்கோள் காட்டி இருக்கிறார். இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்து இருப்பதாவது:


அலைககளை கண்டு, பயந்து படகு செல்வது இல்லை, முயற்சி செய்பவர்கள் ஒருபோதும் துணிவை இழக்கமாட்டார்கள், நாங்கள் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை வார்த்தைகளை வெளியிட்டு இருக்கிறார்.