மும்பை: மகாராஷ்டிர முதலமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு சிவசேனாவுக்கு வழங்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்.

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு கடந்த 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக, சிவசேனா ஒரு கூட்டணியாகவும், தேசியவாத காங்கிரசஸ், காங்கிரஸ் ஒரு கூட்டணி என தேர்தலை சந்தித்தன.

வாக்குப்பதிவு முடிந்து தற்போது முடிவுகளும் வெளிவந்துவிட்டன. ஆட்சியை மீண்டும் பாஜக, சிவசேனா கூட்டணி தக்க வைத்திருக்கிறது. இதையடுத்து, இந்த வெற்றியை அக்கட்சி தலைவர்கள்  உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந் நிலையில், சிவசேனா  தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரின் முதலமைச்சர் பதவி தருமாறு பாஜகவிடம் கேட்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது: தேர்தல் முடிவுகள் வெளி வந்திருக்கின்றன. அதனை தொடர்ந்து முதல் அமைச்சர் யார் என்பது பாஜக வுடன் கலந்து  பேசி முடிவு எடுக்கப்படும்.

பதவிக்காக தான் அலையவில்லை. தேர்தலுக்கு முன்பே செய்து கொண்ட  உடன்படிக்கையை பாஜக நினைவில் கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் 50க்கு 50 என்று நாங்கள் கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம்.மக்களுக்கு நல்ல ஆட்சி வழங்க வேண்டும் என்பது தான் நோக்கம்.

ஜனநாயகம் மீண்டும் தழைக்க வேண்டும் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றனர் என்றார்.