அடுத்த மகாராஷ்ட்ர முதல்வர் ஆதித்ய தாக்கரே : சிவசேனா தலைவர்கள் புகழாரம்

மும்பை

சிவசேனா கட்சியின் தலைவர்கள் ஆதித்ய தாக்கரேவை அடுத்த மகாராஷ்டிர முதல்வர் என அவர் பிறந்த நாளில் புகழ்ந்துள்ளனர்.

மறைந்த பால் தாக்கரே தொடங்கிய சிவசேனா இயக்கம் அரசியல் கட்சியாக உரு மாறியது.    அதன் பிறகு தேர்தல் அரசியலில் இறங்கியது.    பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான சிவசேனா மகாராஷ்டிர அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது.  இதுவரை பால் தாக்கரே மற்றும் அவர் புதல்வர்கள் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே உள்ளிட்ட யாரும் தேர்தலில் போட்டியிட்டது கிடையாது.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்ய தாக்கரேவை அரசியலில் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.   இதை ஆதித்ய தாக்கரேவும் ஒப்புக் கொண்டுள்ளார்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த கூட்டணி மகாரஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் தொடர உள்ளது.   மகாராஷ்டிர முதல்வர் பதவி மற்றும் துணை முதல்வர் பதவி ஆகிய இரு பதவிகளையும் பாஜகவும் சிவசேனாவும் தலா இரண்டரை வருடங்கள் என பங்கிட வேண்டும் என சிவசேனா கூறி வருகிறது.    நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில்  ஆதித்ய தாக்கரே தேர்தல் அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு நடந்தால் அவர் குடும்பத்தில் முதல் முதலாக தேர்தலில் போட்டியிட்டவர் என்னும் பெருமையும் ஆதித்ய தாக்கரேவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.   நேற்று ஆதித்ய தாக்கரேவின் 29 ஆம் பிறந்த தின விழா அவரது மும்பை இல்லத்தில் சிறப்பாக நடந்தது.  இந்த விழாவுக்கு பல பாஜக தலைவர்கள் கலந்துக் கொண்டு ஆதித்ய தாக்கரேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சிவசேனா தலைவர்கள் ஆதித்ய தாக்கரேவை வருங்கால மகாராஷ்டிர முதல்வ்ர் என புகழ்ந்துள்ளனர்.    இது குறித்து சிவசேனாவின் மூத்த தலைவர் ஒருவர், “தற்போது மாநில அமைச்சரவை மாற்றப்பட்டால் ஆதித்ய தாக்கரே துணை முதல்வராக பதவி ஏற்பார்.   அத்துடன் சட்டப்பேரவை தேர்தலுக்கு  பிறகு அவர் மகாராஷ்டிர முதல்வர் பதவி ஏற்பார்.

ஏற்கனவே முதல்வர் பதவியும் துணை முதல்வர் பதவியும் சிவசேனாவும் பாஜகவும் இரண்டரை ஆண்டுகளுக்கு பங்கிட உள்ளன.   அப்போது அந்த இரு பதவியும் ஆதித்ய தாக்கரேவுக்கு அளிக்கப்படும். அவருக்காக மாகிம் மற்றும் சிவாடி ஆகிய இரு தொகுதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.   இங்கு மராட்டிய மக்கள் சிவசேனாவுக்கு முழு ஆதரவு அளிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி