நியூடெல்லி: மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கவிருந்த நேரத்தில் அதிகாரப் பகிர்வில் சிக்கல் ஏற்பட்டு குழப்பம் நிலவுகிறது. இந்த நேரத்தில் சிவசேனாவினர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்திருப்பதால் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

பாஜகவுக்கும் சிவசேனாக்குமிடையே இணக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தல் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை 24 ஆம் தேதி நடந்தது. ஆனால், இதில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பானமை கிடைக்கவில்லை. எனவே, கூட்டணியாகப் போட்டியிட்ட பாஜக சிவசேனா கூட்டாக ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடந்தது. எனினும், அதிகாரத்தை 50-50 என பிரித்துக் கொள்ளலாமென்ற சிவசேனாவின் பிடிவாதத்தால் இழுபறி நீடித்தது.

ஏற்கேனவே இருவருமே தத்தம் பக்கத்தில் ஒத்துக்கொண்ட ஒப்பந்தங்களை கடைபிடிப்பதில் முரண்பட்டிருந்தனர். இதன் விளைவாக தாக்கரே மற்றும் முதல்வர் ஃபட்னாவிஸ் பேச்சில் அதிருப்தி வெளிப்பட்டு வந்தது. அதன் பின் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

அந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சிவசேனாவின் மூத்த நிர்வாகியான் சஞ்சய் ரவுத் மற்றும் அதன் மூத்த எம்பி க்கள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லம் சென்று சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையாக இருக்கலாமென்று அரசியல் செய்தி வட்டாரங்கள் ஆருடம் கூறுகின்றன