மத்திய அரசில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் விலகல்

டில்லி

த்திய அமைச்சர் பதவியில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ஏ ஜி சாவந்த் விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – சிவசேனா கட்சி கூட்டணி இணைந்து பெரும்பான்மையைப் பெற்ற போதும் அதிகார பகிர்வு சர்ச்சை காரணமாக அரசு அமைக்க இயலாத நிலை ஏற்பட்டது.   சிவசேனாவின் முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்குப் பகிர வேண்டும் என்னும் நிபந்தனையை பாஜக ஏற்க மறுத்து விட்டது.   அத்துடன் பாஜக அளித்த துணை முதல்வர் பதவியை சிவசேனா ஏற்க மறுத்து விட்டது.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன்  சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க முயன்றது.   ஆனால் மத்திய பாஜக அரசில் சிவசேனா கட்சி இடம் பெற்றுள்ளதால் அக்கட்சிகள் ஆதரவு அளிக்க தயங்கின.    சிவசேனா கட்சி பாஜகவின் கூட்டணியில் இருந்து முழுமையாக விலகினால் மட்டுமே அக்கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்னும் நிலை ஏற்பட்டது.

அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்னும் முறையில் பாஜகவை ஆட்சி அமைக்க மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு விடுத்தார்.   ஆனால் அக்கட்சி ஆட்சி அமைக்க மறுத்து விட்டது.  இந்நிலையில் சிவசேனா கட்சிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கபட்டுள்ள்து.

இந்நிலையில் மத்திய அரசில் பங்கு பெற்றுள்ள சிவசேனா கட்சி அமைச்சர் ஏ ஜி சாவத் இன்று தாம் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார்.   இதன் மூலம் சிவசேனா கட்சி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வழி ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.