மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வறட்சி தாண்டவமாடுகிறது. வறட்சியால் பாதித்த மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிளில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் சென்று பார்வையிடும் திட்டத்தை சிவசேனா தொடங்கியது. அதோடு தங்களது கட்சி எம்எல்ஏ.க்களையும் அந்தந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டிருந்தார்.

இந்த வகையில் ஒஸ்மனாபாத் தொகுதி சிவசேனா எம்எல்ஏ கவுதம் சாபுக்ஸ்வார் என்பவர் தனக்கு பதிலாக வேறு ஒருவரை வறட்சி பாதித்த மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அனுப்பிவைத்தார்.

முன்னாள் கவுன்சிலரான யசோதர் ஃபான்ஸ் என்ற அவர் ஏதும் அறியாத அப்பாவி கிராம மக்களிடம் தன்மை எம்எல்ஏ சபுக்ஸ்வார் என்று அறிமுகம் செய்து கொண்டார். இதையடுத்து கிராம மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு நடந்த ஒரு கூட்டத்தை யசோதர் பான்ஸ் தலைமை வகித்து நடத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சிஎன்என்-ஐபிஎன் டிவியில் வெளியானது.

மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் பாஜ தனது கூட்டணி கட்சியின் இத்தகைய செயல்பாட்டை கண்டித்துள்ளது. பாஜ தலைவர் சயினா கூறுகையில்,‘‘ இது அதிர்ச்சியாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களை நேரில் சென்றுசந்திக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான பிரிதிவிராஜ் சவுகான் கூறுகையில்,‘‘ இது பெரும் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம். ஒட்டுமொத்த விவசாயிகளின் பிரச்னையை பாஜ&சிவசேனா கூட்டணி அரசு எளிதாக எடுத்துக் கொண்டுள்ளது. சிவசேனா எம்எல்ஏ தனது பணியை வேறு ஒருவரை கொண்டு செய்துள்ளார். இது கேலி கூத்தான செயல்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘சபாநாயகர் அல்லது முதல்வர் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நமக்கு கருணை அதிகம். பெரிய மனிதர்கள் மற்றும் வி.ஐ.பி.க்கள் தண்டிக்கப்படுவது கிடையாது. காங்கிரஸ் மற்றும் எம்எல்ஏ.க்களும் இது குறித்து விவாதித்து முடிவு செய்வார்கள். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.