மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் ராஜினிமா செய்துள்ளதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் கருத்தொற்றுமை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது. கடந்த 8ம் தேதி தனது முதலமைச்சர் பொறுப்பை பட்னாவிஸ் ராஜினாமா செய்த நிலையில், அதிக தொகுதிகளில் வென்ற கட்சியான பாஜகவை மீண்டும் ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைத்திருந்தார். ஆனால் ஆளுநர் அழைப்பை பாஜக நிராகரித்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ள சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

சிவசேனா தரப்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்கப்பட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியே வந்தால் மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என்றும் தேசியவாத காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிவசேனா சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அரவிந்த் சாவந்த், தனது மத்திய அமைச்சர் பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். மத்திய கனரகத் தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சராக இருந்துவந்த அரவிந்த் சாவந்த், தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் அலுவலகத்தில் அளித்துள்ளார். இன்று காலை ராஜினாமா குறித்து டுவிட்டரில் பதிவிட்ட பின்னர், தனது கடிதத்தை அனுப்பியுள்ளதாக தனியார் இந்தி தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அத்தோடு காலை 11 மணிக்கு செய்தியாளர்களை தாம் சந்திக்க இருப்பதாகவும், அப்போது இது குறித்து விளக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா வெளிவந்துள்ளதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.