செருப்படி எம்.பி. மீண்டும் அதே விமானத்தில் பயணம்!! ஏர் இந்தியா ஊழியர்கள் அதிருப்தி

டெல்லி:

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணிக்க ஏர் இந்தியா உள்பட 7 விமான நிறுவனங்கள் தடை விதித்தன. இதனால் பெரும் இன்னல்களு க்கு ஆளான அவர் கடைசியில் இறங்கி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் பிரச்னையை கிளம்பியும் எந்த பலனும் ஏற்படாததால் மன்னிப்பு கோரி கடிதம் கொ டுத்தார். இதை ஏற்ற ஏர் இந்தியா நிறுவனம் அவருக்கு விதித்திருந்த தடையை தளர்த்தியது. இதன் பின்னர் அவர் எந்த விமானத்தில் மேலாளரை அடித்தாரோ அதே விமானத்தில் தற்போது தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

திங்கட்கிழமை காலை 7.40 மணிக்கு புனே&டெல்லி விமானத்தில அவர் பயணம் செய்ய டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவரது டிக்கெட் ஓப்பன் டிக்கெட்டாக மாற்றப்பட்டிருந்தது. இதனால் அவர் எந்த விமானத்தில் வேண்டுமானாலும் பயணிக்கலாம். ஆனால், எந்த விமானத்தில் பிரச்னை நடந்ததோ அதே விமானத்தில் அவர் பயணம் செய்தார்.

தாக்குதலுக்கு உள்ளான ஊழியரிடம் அவர் நேரடியாக மன்னிப்பு கேட்கவில்லை. அதனால் அந்த எம்பி அதே விமானத்தில் பயணம் செய்ததை ஊழியர்கள் விரும்பவில்லை. விமானத்தில் அவருக்கு விவிஐபி கவனிப்பு அளிக்கப்பட்டதா? என்று அதிகாரி ஒருவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் கூறுகையில்,‘‘ எங்களது விமானத்தில் அனைத்து பயணிகளும் விவிஐபி.கள் தான். எங்களது விமானத்தை தேர்வு செய்து பயணிக்கும் அனைவருக்கும் சிறந்த சேவை அளிக்கப்படும். ஆனால், சிவசேனா எம்பி பயணம் செய்ததில் ஊழியர்கள் யாருக்கும் உடன்பாடில்லை’’ என்று தெரிவித்தார். அதோடு எம்பி மீது சிவசேனா எவ்வித நடவடிக்கையையும் எடுக்காதது ஆச்சர்யமாக உள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

செருப்பால் ஊழியரை அடித்தது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் 3 முறை புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனினும் எம்.பி.யை மத்திய அரசு எச்சரித்துள்ளது. விமான ஊழியர்கள் மற்றும் இதர பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இச்சம்பவம் மூலம் இந்தியாவில் அதிகார துஷ்பிரயோகம் செய்வோர் பின்னர் மண்டியிட வேண்டி வரும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.