கங்கனாவுக்கு பதிலடி கொடுத்த ஊர்மிளாவுக்கு சிவசேனா வெகுமதி : எம்.எல்.சி. ஆக்கப்படுகிறார்..

 

மும்பை :

லக்கியம், கலை, சமூக சேவை, அறிவியல் ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளவர்களை மகாராஷ்டிர சட்ட மேல்-சபை உறுப்பினராக (எம்.எல்.சி) நியமிக்க அங்குள்ள ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் உண்டு.

ஆளுநருக்கு உரிய இந்த கோட்டாவின் படி 12 எம்.எல்.சி. பதவி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

இந்த காலி இடங்களில் ஒன்றை பிரபல நடிகை ஊர்மிளாவுக்கு வழங்க மகாராஷ்டிர மாநில ஆளுங்கட்சியான சிவசேனா முடிவு செய்துள்ளது. காரணம் என்ன?

மும்பை நகரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் மற்றொரு நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்த போது, அவருக்கு சுடச்சுட பதிலடி கொடுத்தவர், ஊர்மிளா. இதனால் ஊர்மிளா மீது சிவசேனாவுக்கு கரிசனம்.


ஊர்மிளாவுக்கு ஒரு வெகுமதியாக அவரை எம்.எல்.சி.ஆக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. இந்தி நடிகை ஊர்மிளா, கமல் நடித்த ’இந்தியன்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டிலும் ஓரளவு அறிமுகமானவர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த ஊர்மிளா, கடந்த மக்களவை தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ..க. வேட்பாளரிடம் தோற்றுப்போனார்.

அண்மையில் மும்பை காங்கிரசார், தன்னை ஓரம் கட்டுவதாக குற்றம் சாட்டி அந்த கட்சியில் இருந்து விலகி விட்டார்.

ஊர்மிளாவுக்கு எம்.எல்.சி. பதவி அளிக்கப்படுவது குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் கேட்ட போது “நானும் இந்த செய்தியை ஊடகங்களில் பார்த்தேன். ஊர்மிளாவுக்கு எம்.எல்.சி. பதவி வழங்குவது பற்றி முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே முடிவு எடுப்பார்’’ என பதில் அளித்தார்.

– பா.பாரதி