மோடிக்கு ராகுல் அளித்தது அணைப்பு அல்ல  அதிர்ச்சி : சிவசேனா

மும்பை

மோடியை ராகுல் கட்டிப்பிடித்தது அவர் மோடிக்கு அளித்த அதிர்ச்சி என சிவசேனா பாராட்டி உள்ளது.

நேற்று முன் தினம் நம்பிக்கை இல்லா தீர்மான விவாதத்தின் போது ராகுல் காந்தி காரசாரமாக பேசி  பாஜகவை கடுமையாக  தாக்கினார்.  அவருடைய இந்த உரை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.    தனது உரையை முடித்த ராகுல் காந்தி யாருமே எதிர்பாராத ஒரு செய்கையை செய்தார்.    வேகமாக மோடியின் இருக்கை அருகே சென்ற அவர் மோடியைக் கட்டிப் பிடித்தர்.

இது அவையிலும் அவைக்கு வெளியிலும் கடும் ஆச்சரியத்தை உண்டாக்கியது.    எதிர்க்கட்சி என்பது வேறு எதிரிகள் என்பது வேறு என்பதை ராகுல் காந்தி தெளிவாக புரிந்துக் கொண்டதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

ராகுல் காந்தியின் இந்த செயலுக்கு பாஜகவின் முன்னாள் கூட்டணி  கட்சி சிவசேனா பாராட்டு தெரிவித்துளது.

அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரௌத், “ராகுல் காந்தி தற்போது அரசியல் கல்லூரியில் பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.    நாடாளுமன்றத்தில் மோடியை  ராகுல் காந்தி  கட்டிப்பிடித்தது மிகவும் பாராட்டுக்குரியது.   இது மோடிக்கு அளித்த அணைப்பு இல்லை, அதிர்ச்சி ஆகும்” என கூறி உள்ளார்.