மராத்தா இடஒதுக்கீடு: ஒரு மணி நேரம் முதல்வரை மாற்றினால் தீர்வு கிடைக்கும்….சிவசேனா

--

மும்பை:

மகாராஷ்டிராவில் மராத்தா சமுகத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலைக்கு முயன்ற 2 பேர் காப்பாற்றப்பட்டனர். போராட்டம் வன்முறையாக மாறியது. வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவங்களும் நடந்தது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது..

இந்நிலையில், மகாராஷ்டிரா பாஜக அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் பங்கஜா முண்டே கூறுகையில்,‘‘மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் எனது மேஜைக்கு வந்தால் அதற்கு கூடிய விரைவில் ஒப்புதல் அளித்துவிடுவேன். ஆனால், அது நீதித்துறைக்கு முன்பு உள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்த கருத்தை வைத்து சிவசேனா தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவில் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸூக்கு ஒரு ஆலோசனை வழங்கி கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

பங்கஜா முண்டே

அதில், ‘‘அமைச்சர் பங்கஜா முண்டேவை ஒரு மணி நேரம் முதல்வராக்க வேண்டும். அவர் மராத்தா இட ஒதுக்கீடு கோப்புகளில் உடனடியாக கையெழுத்து போட்டுவிடுவார். இதன் மூலம் பற்றி எரியும் மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த கட்டுரையில்,‘‘மகாராஷ்டிரா அரசு வேண்டுமென்ற மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னையை கிடப்பில் போட்டுள்ளதா? என்ற சந்தேகம் மராத்தா மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதில் முடிவு எடுக்க முடியாமல் முதல்வர் குழப்பத்தில் உள்ளாரா?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.