டெல்லி: யாருக்கு அரியணை என்ற பிரச்னையில் தீர்வு காண மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலையிட வேண்டும் என்று சிவ சேனா விருப்பம் தெரிவித்து இருக்கிறது.

நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, மகாராஷ்டிரா முதலமைச்சர் யார் என்ற குழப்பம், பாஜக, சிவசேனா கூட்டணி இடையே தீர்ந்தபாடில்லை. இரு தரப்பிலும் தொடர்ந்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

ஆட்சியில் சமபங்கு என்ற கோரிக்கையை சிவசேனா கைவிடுவதாகவோ அல்லது அந்த விவகாரத்தை தூர நின்று பார்க்கவோ விரும்பவில்லை. ஏதேனும் ஒரு வகையில் பாஜகவை சமரசப்படுத்தி முதலமைச்சர் பதவியில் அமர துடிக்கிறது.

அதற்கு கட்டியம் கூறும் வகையில், இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்க, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலையிட வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் ஆலோசகர் கிஷோர் திவாரி விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறேன். இந்த பிரச்னையில் பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரியை களம் இறக்கி தீர்வு காண வேண்டும். சிவசேனாவுடன் வந்து பேச வேண்டும் என்ற வலியுறுத்தி உள்ளேன்.

அவர் கூட்டணி தர்மத்தை மதிக்க மாட்டார் என்பது இருந்தாலும், பிரச்னையை 2 மணி நேரத்தில் தீர்ப்பார் என்றார். பிரச்னை தீர்வுக்கு வந்தவுடன், முதல் 30 மாதங்கள் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இருப்பார்,எஞ்சிய 30 மாதங்கள் பாஜக முதலமைச்சர் பதவியில் இருக்கும்.

இரு கட்சிகள் இடையே தற்போது காணப்படும் நிலைமை, பட்னாவிசின் பேச்சு ஆகியவற்றை பார்க்கும் போது, மூத்த அரசியல்வாதியான நிதின் கட்கரி பொருத்தமாக இருப்பார் என்றார்.

திவாரியின் கருத்து பற்றி ஆர்எஸ்எஸ் தலைமையின் பதில் வெளிவராத நிலையில், அதன் நாளிதழான தருண் பாரத்தில், அவரை பொய்யர், கோமாளி என ஏக வசனத்தில் கடுமையாக விமர்சித்து இருக்கிறது.

சிவசேனாவின் கோரிக்கைகளை பற்றி பாஜக சில மதிப்பீடுகளை வைத்திருக்கிறது. முக்கியமாக, அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ள தருணத்தில், அரசியல் ரீதியாக முக்கிய மாநிலமான மகாராஷ்ராவில் பாஜக அல்லாத முதலமைச்சரை அமரவைக்க விரும்பவில்லை.

மற்றொறு காரணமும் இருக்கிறது. ஒரு மாநிலத்துக்கு இரு முதலமைச்சர்கள் என்பது ஜார்க்கண்டில் இம்மாதம் நடைபெறும் சட்டசபை வாக்குப்பதிவின் போது பாதிக்காது, ஆனால் 2020ம் ஆண்டு மற்ற மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாஜக கருதுகிறது.