திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம்! எடப்பாடி திறந்து வைத்தார்

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள ஆதித்தனர் கல்லூரி அருகில் பத்திரிகை அதிபர் மறைந்த பா.சிவந்தி ஆதித்தனாருக்கு தமிழகஅரசு சார்பில் கட்டப்பட்டுவந்த மணி மண்டபம் இன்று முதல்வர் எடப்பாடியால் திறந்து வைக்கப்பட்டது.

தமிழ் பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் சிவந்தி ஆதித்தனர். இவரது மறைவையொட்டி, அவருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதையடுத்து, தமிழக அரசு சார்பில்,   திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில்கடந்த 2018ம் ஆண்டு 60 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அதற்காக ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, அவரது முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

மணிமண்டப கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்து, சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அங்குள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் அவர் உரையாற்றினார்.

இந்த விழாவில்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டசபை துணை சபாநாயகர், அரசு தலைமைக் கொறடா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, எம்.பி. – எம்.எல். ஏ.க்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கார்ட்டூன் கேலரி