மும்பை: டிராபிக் காவலரை தாக்கிய வழக்கில் தற்போதைய சிவசேனா ஆட்சியில் அமைச்சராக உள்ள யசோமதி தாக்கூருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவ சேனா மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் யசோமதி தாக்கூர்.
இவர் கடந்த 2012-ம் ஆண்டில் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அமராவதி மாவட்டம் சுன்னாப்பட்டி பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்து விதியை மீறி ஒருவழிப்பாதை வழியாக காரில் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர்  அவரது காரை தடுத்து நிறுத்தினார்.   இதனால் ஆத்திரம் அடைந்த யசோமதி தாக்கூர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் போலீஸ்காரரை தாக்கினர்.
இந்த சம்பவம் குறித்து ராஜாபேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கின் விசாரணை அமராவதி மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வழக்கை விசாரித்த நீதிபதி ஊர்மிளா ஜோஷி நேற்று தீர்ப்பு அளித்தார்.
அதன்படி  மந்திரி யசோமதி தாக்கூர் மற்றும் அவரது கார் டிரைவர், 2 ஆதரவாளர்களுக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.15 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
8 ஆண்டுகளுக்கு முன் காவலரை தாக்கிய வழக்கில் யசோமதி தாக்கூருக்கு மாவட்ட நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசான உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடியை ஏற்பட்டுள்ளது .