மும்பை: மோடி அரசின் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் ஆதரித்த சிவசேனா கட்சி, அந்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரிக்க மாட்டோம் என்று பின்வாங்கியுள்ளது.

எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக நலம் விரும்பிகளின் கடும் எதிர்ப்புக்கு உள்ளான மசோதாவை மக்களவையில் 311 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றியது மோடி அரசு.

மராட்டியத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே, அந்த மசோதாவை மக்களவையில் ஆதரித்தது சிவசேனா. இது பல கேள்விகளை எழுப்பியதால், சிவசேனா தரப்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டது.

அந்த மசோதா அடுத்து ராஜ்யசப‍ையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், அந்த மசோதாவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். இதனால், சிவசேனாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்ற பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில், நாங்கள் எதிர்பார்க்கும் திருத்தங்களை மசோதாவில் சேர்க்காவிட்டால், அந்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரிக்கமாட்டோம் என்று கூறி, தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக்கொண்டுள்ளது சிவசேனா.

இதனைத் தெரிவித்திருப்பவர், மராட்டிய முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தயவில் முதல்வர் பதவியில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் சிவசேனா, எதையும் கெடுத்துக்கொள்ள விரும்பாது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.