சிந்தியாவை தொடர்ந்து சச்சின் பைலட் : பாஜகவைத் தாக்கும் சிவசேனா

மும்பை

த்தியப்பிரதேசத்தில் சிந்தியா மற்றும் ராஜஸ்தானில் சச்சின்பைலட் என பாஜக குறி  வைப்பதாக சிவசேனா கட்சி கூறி உள்ளது.

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் விலகி பாஜகவில் இணைந்தார்.   இதனால் அங்கு அரசு கவிழ்ந்து பாஜக ஆட்சியைப் பிடித்தது.க்   தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வருகிறார்.

இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தனது  தலையங்கத்தில், ” நாடு ஒரு புறம் கொரோனா வைரஸினால் தத்தளித்துக் கொண்டிருக்கையில் இன்னொரு புறம் பாஜக வித்தியாசமான குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.  ஏற்கனவே  மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸின் கமல்நாத் அரசை பாஜக கவிழ்த்தது, இப்போது ராஜஸ்தானில் கவிழ்க்க முயல்கிறது என்றாலும் இது முடியவில்லை என்பது வேறு ஒரு விஷயம்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் ஜோதிராதித்யா 22 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி பரிசு. எதிர்கால அமைச்சர் பதவியும் உறுதி. என ம.பி.யில் இது நடக்கும் போதே ராஜஸ்தானிலும் இவ்வாறு நிகழும் என்று பலரும் கணித்து விட்டனர்.

ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட்டும் சிந்தியாவின் பாதையில் செல்வார் என்று கணிக்கப்பட்டது உண்மையாகி வருகிறது.  சச்சின் பைலட் தற்போது 30 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ராஜஸ்தானின் 200 உறுப்பினர் சட்டப்பேரவையில் காங்கிரஸ் 108 இடங்களுடனும் பாஜக, 72 இடங்களுடனும், உள்ளது.

இப்போது காங்கிரஸ் சிறுபான்மை ஆட்சி என்று பைலட் கூறுகிறார்.  பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை முறைப்படி எண்ணி சாதக நிலையை உறுதி செய்யாமல் வெளிப்படையாக எதையும் செய்யாது என்பதால் இப்போதைக்கு திரைமறைவு வேலைகளைச் செய்து வருகிறது.

முன்பு மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்துக்காக நியமித்த பாஜக வலையில் இப்போது சச்சின் பைலட் விழுந்துள்ளார். அவருக்கு முதல்வர் பதவி ஆசை உள்ளது, அவர் இளைஞர் என்பதால் எதிர்காலத்தில் கூட முதல்வராகலாம்.   ஆயினும் முதல்வர் அசோக் கெலாட் நாற்காலிக்கு பைலட் போர்க்கொடி தூக்கியுள்ளார்.  ஏற்கனவே கட்சி பிரச்சினையில் இருக்கும்போது சச்சின் பைலட் இப்படி நடந்து கொள்வது அவருக்கே ஆபத்தாக முடியும்.

சச்சின் பைலட்டின் அராஜகமும் பதவி ஆசையும் ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க முனைகிறது,  அவரால் இதனை மத்தியில் ஆளும்  உதவியில்லாமல் செய்ய முடியாது.  பாஜக ஆளும் மத்திய அரசும் ஒரு பார்முலாவை ஒர்க் அவுட் செய்து கவிழ்ப்பு அரசியலில் ஈடுபட்டு வருகிறது.

இப்போது சீனாவின் ஊடுருவல், கொரோனா பரவல் அதிகரிப்பு என்று எத்தனையோ விவகாரங்கள் இருக்கும் போது ஆட்சிக்கவிழ்ப்பு மட்டுமே பாஜகவுக்கு முக்கியமாகப் போய்விட்டது. இந்த மத்திய அரசுக்கு வேறு வேலை இல்லையா?  எப்போதும் இதே வேலையாகவா அலைவார்கள்?” எனக் கூறி உள்ளது.