சத்ரபதி சிவாஜியை மோடியுடன் ஒப்பிட்டு வீடியோ : சிவசேனா கடும் கண்டனம்
டில்லி
பிரதமர் மோடியை சத்ரபதி சிவாஜியாகவும் அமித் ஷாவை சிவாஜியின் தளபதி தானாஜியாகவும் ஒப்பிடும் வீடியோவுக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மக்களிடையே சத்ரபதி சிவாஜி மீது பக்தி உள்ளது. சமீபத்தில் அவருடைய தளபதியான தானாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த திரைப்படத்தின் டிரெயிலர் சற்று மாற்றி அமைக்கப்பட்டு மோடியைச் சிவாஜியாகவும் அமித்ஷாவை தானாஜியாகவும் ஒப்பிட்டு வீடியோ ஒன்று யூ டியூபில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோ பாஜகவினரால் வெளியிடப்பட்டுள்ளது. டில்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி வெளியான இந்த வீடியோவில் டில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சத்ராதி சிவாஜியின் எதிரியான உதயபான்சிங் ராதோட் என சித்தரிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் டில்லி தேர்தல் பிரசாரத்தில் ஒரு பகுதியாக இது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் சிவசேனா கட்சியினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத்,”மகாராஷ்டிர மக்களுக்கு சத்ரபதி சிவாஜி ஒரு கடவுளுக்கு ஒப்பானவர். அவரது பெயரைத் தவறாக பயன்படுத்துவது சரி அல்ல. நிச்சயமாக யாராலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.