சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கும் : உத்தவ் தாக்கரே

மும்பை

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் என சிவசேனா க்ட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்

மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கட்சிக் கூட்டணியின் இடையில் முதல்வர் பதவி பங்கீடு குறித்து நேர்ந்த மோதல் காரணமாகக் கூட்டணி உடைந்தது.    அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி என்னும் முறையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார்.  ஆனால் ஆட்சி அமைக்க பாஜக மறுத்து விட்டது.

அடுத்ததாக சிவசேனா காட்சியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தார்  சிவசேனா கட்சி ஒப்புதல் அளித்தும் போதிய ஆதரவு இருப்பதைக் காட்ட கால அவகாசம் கேட்டதை ஆளுநர் மறுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.   அக்கட்சியாலும் உடனடியாக பெரும்பான்மையைக் காட்ட முடியாத நிலை உள்ளதால் ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் சிபாரிசு செய்தார்.

நேற்று தெற்கு மும்பையில் உள ஒரு ஓட்டலில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், “நாங்கள் கடந்த 11 ஆம் தேதி அன்று ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை அணுகினோம்.  அனைவரும் இணைந்து ஒரு குறைந்தபட்ச பொது திட்டம் அமைக்க உள்ளோம்.

நாங்கள் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்தே இவ்விரு கட்சிகளையும் தொடர்பு கொண்டு வருவதாக பாஜக கூறுவது தவறான குற்றச்சாட்டாகும்.   திங்கள் கிழமை அன்று நாங்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளபோது ஆளுநர் அவகாசம் அளிக்க மறுத்துள்ளார்.

ஆளுநர் தற்போது மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமைக்கப் பரிந்துரை செய்தது மிகவும் தவறானதாகும்.   சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு திட்டம் அமைத்து அதன் கீழ் விரைவில் ஆட்சி அமைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.