மும்பை

காராஷ்டிராவை சேர்ந்த வீரசாவர்க்கர் என அழைக்கப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்காதது ஏன் என சிவசேனா மோடிக்கு வினா எழுப்பி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட மற்றும் இந்துத்வா வீரரான வீர சாவர்க்கர் என அழைக்கப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கர் ஆயுள் தனடனை பெற்றவர் ஆவார். அவர் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை அந்தமான் சிறையில் கழித்தார். பாஜகவின் மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சியான சிவசேனா அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளது.

சிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத் பிரதமர் மோடிக்கு இது குறித்து பலமுறை கடிதம் எழுதி உள்ளார். வீர சாவர்க்கரின் இந்துத்வா அபிமானம் காரணமாகவே அவருக்கு பாரத ரத்னா வழங்கப்படாமல் இருந்ததாகவும் தற்போதைய பாஜக அரசு வழங்க வேண்டும் எனவும் சிவசேனா வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அவருடைய கோரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகார பூர்வ ஏடான சாம்னா தனது தலையங்கத்தில், “காங்கிரஸ் அரசு வீர சாவர்க்கரை தொடர்ந்து அவமானம் செய்து வந்தது. ஆனால் மோடியின் அரசு பதவிக்கு வந்து என்ன செய்துள்ளது? எதிர்க்கட்சியாக இருந்த போது வீர சாவர்க்கருக்கு பாரதரத்னா விருது வழங்க பாஜக கோரிக்கை விடுத்தது. ஆனால் ராமர் கோவிலை கட்டாமல் விட்டதைப் போல் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கவும் தவறி விட்டது.

மோடியின் ஆட்சியில் சாவர்க்கரை கவனியாமல் விட்டது மிகவும் துரதிருஷ்ட வசமானது. மோடி ஏற்கனவே அந்தமான் சிறையில் வீர சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த இடத்தை பார்வை இட்ட போது அவருக்கு பாரத ரத்னா அளிப்பது பற்றி குறிப்பிட்டார். ஆனால் அவர் கூறியது அந்தமான் கடலில் அடித்துச் செல்லப்பட்டது.

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அவருடைய ஜனாதிபதி பணியே காரணம் என கூறப்பட்டுள்ளது. அவருடைய பணி பாரதரத்னா விருது பெற தகுதி உள்ளது என்றால் மத்திய அரசு ஏன் அவரை மீண்டும் ஜனாதிபதி ஆக்கவில்லை. அவரை எதிர்த்து பாஜக ஆட்களை நிறுத்தாமல் அவருக்கு வாய்ப்பு அளித்திருக்கலாமே” என தெரிவித்துள்ளது.