“காப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணிகள்” என்ற கட்டுரையின் இரண்டாம் பாகம் இது.  கடந்த அத்தியாத்தில், “ஐ.ஆர்.பி.எஸ்.” என்றால் என்ன என்ற கேள்வியோடு விடைபெற்றிருந்தோம். ஐ.பி.ஆர்.எஸ். என்றால் என்ன என்றும், அது  எப்படி படைப்பாளிகளை வஞ்சிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்களையும் இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

IPRS என்பது The Indian Performing Right Society Limited என்பதின் சுருக்கமாகும்.

படைப்பாளர்களின் உரிமையை பாதுகாக்கவென்றே உருவாகிக் கொண்டதொரு அமைப்பு இது ! அரசாங்க அமைப்பா என்றால் இல்லை ! ஆனாலும், விலங்குகள் நல வாரியம் போன்று அரசாங்கத்தில் செல்வாக்குள்ள ஓர் அமைப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த அமைப்பின் பைலாவும் கூட, ஒருபாடலுக்கு உரிமை யுள்ளவர்கள் மூவர் என்கிறது.  அதன்படி, பாடலாசிரியர்கள் – இசையமைப்பாளர்கள் – அதை வெளியிடும் ஆடியோ தயாரிப்பாளர்கள் ஆகியோரை உரிமையாளர்களாக முன் வைத்து, அவர்கள் சார்பாக பணம் வசூலிக்கிறது.

அதாவது, ஒரு படைப்பு வணிக ரீதியாக இந்த சமூகத்தில் நிகழ்த்தப்படும் போது, சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து  படைப்பாளர்களுக்கு உண்டான உரிமைத் தொகையை வசூலித்து கொடுக்க வேண்டிய பணியை மேற்கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் IPRS.  இது உலகளாவியதொரு அமைப்பு ஆகும்.

சரி, இவர்கள் என்ன செய்கிறார்கள்….?

நாடு முழுவதும் பரந்து செயல்படும் ரேடியோக்கள் – தொலைக்காட்சிகள் – விமானங்கள் – ஜ்யூக் பாக்ஸ் – மால்கள் – பார்க்குகள் – கல்யாண சத்திரங்கள் – ஓட்டல்கள் – பெட்ரோல் பம்புகள் – இண்டர்நெட் – டாக்டர் க்ளீனிக்குகள் என கலந்து கட்டி கிட்டத்தட்ட நாற்பத்தெட்டு இனங்களில் படைப்பாளர்கள் சார்பில் இவர்கள் “ராயல்டி” வசூலிக்கிறார்கள்.

ஆண்டுக்கு குறைந்த பட்சம் 85 கோடியிலிருந்து 100 கோடி வரைக்கும் கணக்கு காட்டப்படுகிறது. அந்தக் கணக்கு உண்மையா என்பதைத் தாண்டி, தான் ஏற்றுக் கொண்ட கடமைகளையாவது ஒழுங்காக செய்கிறதா என்றால் அதுவும் இல்லை ! பாரபட்சம் காட்டுகிறது. ஏமாற்றுகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள் படைப்பாளிகள்.

பெரும் முதலைகள் எல்லாம் இதற்கு உள்ளே இருக்கின்றார்கள். பின்னே ஆண்டுக்கு, 100 கோடி ! எதிராளிகளோ எளிய மனம் படைத்த கலைஞர்கள் ! ஆட்டையைப் போட ஏற்ற இடம் ! விடுவார்களா..?

இதனுடைய நிர்வாக செலவுகள் எல்லாம் கேட்டால் தலை சுற்றிப் போகும். இவர்கள் பிஸினஸ் க்ளாசில்தான் பறப்பார்கள். நட்சத்திர ஓட்டல்களில்தான் மீட்டிங் போடுவார்கள் ! கோவா ரிசார்ட்டுகளில் கூடி படைப்பாளிகளின் எதிர்கால நலன் குறித்து விவாதிப்பார்கள் ! வேர்ல்டு கான்ஃபரன்ஸ்ஸுக்கு குடும்பத்தோடு போவார்கள் ! எல்லாம் படைப்பாளிகளின் பணம். ஆனால், படைப்பாளிகளை இவர்கள் மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு சுண்டைக்காயின் தோலை மட்டும் கொடுத்து விட்டு, புன்னகைக்க சொல்லி கொடுமைப் படுத்துவார்கள் !

ஐ பி ஆர் எஸ் தாங்கள் வசூலிக்கும் 100 கோடி பணத்தை நாடு தோறும் இருக்கும் படைப்பாளர்களுக்கு எந்த வரைமுறையில் பிரித்துக் கொடுக்கிறது என்பதற்கு இன்றுவரை கணக்கில்லை. கொடுப்பதை வாங்கிக் கொள் என்பார்கள். ஒருவகையான வொயிட் கலர் மாஃபியா போல நடந்து கொள்வார்கள்.

ஐபி ஆர் எஸ்ஸில் இருப்பவர்களுக்கு வால் பிடிக்கத் தெரிந்தால் உங்களுக்கு அதிகப் பணம். குடைச்சல் கொடுக்கும் ஆளா..? ஏதாவது ஒரு பதவியும் கொஞ்சம் பணமும் சேர்த்துக் கொடுக்கப்படும். கடைசி பெஞ்சில் அமைதியாக உக்கார்ந்திருக்கும் பிள்ளைப் பூச்சியா…? உங்களுக்கு மனம் போன போக்கில் ஒரு அமௌண்ட் விழும். வாங்கிக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். எதிர்த்துக் கேட்டால் அடுத்த வருடம் இன்னும் குறைப்பார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும், இரண்டு தலையாட்டிகளை செட் செய்து கொண்டு அராஜகம் செய்வார்கள்.

இவர்களின் அராஜகம் பொறுக்க முடியாமல் தான், இளையராஜா இந்த அமைப்பிலிருந்து வெளியேறி விட்டார். அவரது காபிரைட் ஆலோசகர் ப்ரதீப் குமார், இந்த “ஐ.பி.ஆர்.எஸ்” அமைப்பை, ஏமாற்றுப் பேர்வழிகள் என்று சாடுகிறார். ஆம், இதற்குள் இருப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் வட நாட்டு முதலைகள்தான். பேருக்கு சில தென்னிந்தியப் பெயர்கள் தட்டுப்பட்டாலும் எல்லாம் பினாமிதான்.

இந்த மோசடி வலையிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிறகான நவீன காலப் படைப்பா ளர்களெல்லாம் சுதாரித்துக் கொண்டார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் முதற்கொண்டு இமான் வரைக்கும் உஷாராகி விட்டார்கள். ஒப்பந்தங்களை முன் கூட்டியே கருக்காக போட்டுக் கொள்கிறார்கள். எப்படி உஷாராவது என்பதை சக படைப்பாளர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் தங்களுக்குளேயே கமுக்கமாக அனுபவித்துக் கொள்கிறார்கள் என்பது வேதனையானதொன்று.

சொல்லப் போனால், ஆர்.டி. பர்மன் ஒருமுறை சொன்னது போல… எல்லாவிதமான டெக்னாலஜியையும் வைத்துக் கொண்டு ஒரு பாடலை 3 மாதங்கள் செதுக்கிக் கொண்டிருக்கும் இவர்கள் எல்லாம் வெறும் இசை டெக்னீஷியன்கள்தான்.

உண்மையான இசையமைப்பாளர்கள் என்பவர்கள் இவர்களது காலத்துக்கு முந்தைய எம்.எஸ்.வி மற்றும் இளையராஜா போன்றவர்கள்தான். குறைந்தது 50 இசைக்கலைஞர்களோடு ஒரு நாளில் மூன்று பாடல்கள் நான்கு பாடல்கள் என்று படைத்தவர்கள். அவர்களது பாடல்கள் மொத்தமும் சாகாவரம் பெற்றவைகள். இதற்கு சாட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறுவர்கள், தங்கள் திறமைகளை  நிரூபிக்க இவர்களது பாடல்களைத்தான் அதிகம் பாடுகிறார்கள். அப்படிப்பட்ட உயர்ந்த படைப்பாளர்களான இவர்களுக்கு, இவர்களுக்குண்டான காபிரைட் உரிமைத் தொகை ஒழுங்காக போய் சேர்ந்ததா, சேர்கிறதா என்றால் இல்லை. இசை இசை என்றே இருந்து விட்டதாலும், அந்தக் காலத்தில் இவ்வளவு விழிப்புணர்வு இல்லாமல் போனதாலும் சுதாரிக்காமல் இருந்துவிட்டார்கள்.

(அதிர்ச்சிகள் தொடரும்)