புதுடெல்லி: அர்னாப் கோஸ்வாமியின் விஷயத்தில் உடனடி அக்கறை செலுத்தி, பாவப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்த உச்சநீதிமன்றத்தின் செயல்பாடு கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
முன்னேற்பாடுகள் எதுவுமில்லாத மோடி அரசின் மோசமான ஊரடங்கால், நாடு முழுவதும் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் வரலாறு காணாத இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். எனவே, இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க மறுத்த நீதிமன்றம், “நடந்து செல்கின்ற மக்களை நடக்கக்கூடாது என எங்களால் தடுக்க முடியாது” என்று அலட்சியமாக பதில்கூறி ஒதுங்கிக் கொண்டது.
ஆனால், பத்திரிகை உலகின் மாபெரும் சாபக்கேடாக கருதப்படும் அர்னாப் கோஸ்வாமி மீது பல்வேறு வழக்குகள் (மத வெறியைத் தூண்டியது உள்ளிட்ட) பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கைதிலிருந்து தப்பிக்க அவர் தாக்கல் செய்த இரண்டாவது முன்ஜாமின் மனுவை உடனடியாக விசாரித்த நீதிமன்றம், அதை மேலும் நீட்டித்து உத்தரவிட்டது.
ஏற்கனவே, மே மாதம் 14ம் தேதிவரை, கோஸ்வாமியை கைது செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்தத் தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், இவ்வளவு அக்கறை காட்டும் உச்சநீதிமன்றம், மாபெரும் மானிடத் துயரத்தில் சிக்குண்டிருக்கும் இந்த நாட்டின் சாதாரணக் குடிமக்கள் விஷயத்தில் இப்படி நடந்துகொள்வது அதன் தரத்தை பெரியளவில் கேள்வி எழுப்புவதாக உள்ளது.