கர்நாடகா : காங்கிரஸ் தலைவர்களின் அதிர்ச்சி தோல்வி

பெங்களூரு

கர்நாடகா மாநிலத்தில் பல காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சிகளான மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி கடும் தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை வெற்றியை மட்டுமே கண்டு வந்த பல தலைவர்கள் தற்போது தோல்வியை கண்டுள்ளனர். அது மட்டுமின்றி இந்த இரு கட்சிகளின் அரசியல் புள்ளிகளின் வாரிசுகளும் தோல்வி அடைந்துள்ளனர்,

தொடர்ந்து ஒன்பது சட்டப்பேரவை தேர்தல்களிலும் இரு மக்களவை தேர்தல்களிலும் வெற்றி பெற்றதால் மல்லிகார்ஜுன கார்கே தோல்வியை காணாத தலைவர் என கன்னட மக்களால் போற்றப்படுபவர் ஆவார். ஆனால் அவர் இம்முறை குல்பர்கா தொகுதியில் பாஜகவின் உமேஷ் ஜாதவ் இடம் 95,452 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார், உமேஷுக்கு மூத்த மற்றும் பண்பட்ட அரசியல்வாதியான மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆனால் அவருடைய தோல்விக்கு அவர் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியாங்க் கார்கேவுக்கும் உள்ளூர் காங்கிரஸ் தலவர்களான பாபுராவ், மாலக்கரெட்டி, மாலிக்காய குட்டெதார் ஆகியோருக்கும் ஆன பகையே காரணம் என பலரும் தெரிவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் பிரியாங்க் கார்கேவின் மீதான விரோதத்தால் பாஜகவில் இணைந்து மல்லிகார்ஜுன கார்கே தோல்விக்கு உதவி செய்துள்ளனர்.

மற்றொரு காங்கிரஸ் தலைவரான கே எச் முனியப்பா தொடர்ந்து 7 முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆவார். தற்போது பாஜகவின் வேட்பாளர் முனிசாமியிடம் அவர் 2,10,021 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இந்த வித்தியாசம் முனியப்பாவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அவருடைய தோல்விக்கு காரணம் அவருடைய சாதி மற்றும் கட்சியின் உட் பிரிவினைகளே ஆகும் என சொல்லப்படுகிறது.

அடுத்தபடியாக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லியும் தோல்வி அடைந்துள்ளார். இவர் ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்த பாஜகவின் பச்சே கவுடாவிடம் தோற்றுள்ளார். இந்த தோல்விக்காக காங்கிரஸை சேர்ந்த சிலரே காரணம் என கூறப்படுகிறது. இவர்கள் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியால் பாதிக்கப்பட்டதால் இவ்வாறு நடந்துக் கொண்டுள்ளனர் என வீரப்ப மொயிலிக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.