அதிர்ச்சிகரமான தோல்வியைத் தழுவிய அர்ஜெண்டினா..!

நெட்டிசன்:

saravanan savadamuthu அவர்களின் முகநூல் பதிவு:

இன்றைய முதல் போட்டியில் கால்பந்தின் ஜாம்பவான்களின் நாடான அர்ஜெண்டினா, குரோஷியாவை எதிர்த்தது. இதில் உலகத் தர வரிசைப் பட்டியலில் அர்ஜெண்டினா 5-வது இடத்திலும் குரோஷியா 20-வது இடத்திலும் இருக்கின்றன.

இந்தப் போட்டி மிக பரபரப்பாக இருக்கும் என்று முன்பேயே எதிர்பார்க்கப்பட்டதுதான். அதுபோலவேதான் கடைசிவரையிலும் நடந்து முடிந்தது.

துவக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் புத்துயிர்ப்புடன் ஓடினர். கீழே விழுவதற்கோ, இடித்துத் தள்ளுவதற்கோ, காலை வாரி விடுவதற்கோ, காலை மிதிப்பதற்கோ ஒருவருக்கொருவர் அஞ்சவில்லை. ஆனால் மிஞ்சினார்கள்.

இரண்டு பேருமே சம பலம் வாய்ந்தவர்களை போல இருந்ததால் மாறி, மாறி கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தார்கள். கோல் போஸ்ட்டுகளும் மாறி மாறி முற்றுகையிடப்பட்டன.

17-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் பெரஸ்ஸிற்கு ஒரு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. குட் பாஸிங்கில் கிடைத்த பந்தை இன்னும் கொஞ்சம் முனைப்பாக கவனித்து அடித்திருந்தால் கோலாகியிருக்கும். ஆனால் ஜஸ்ட் மிஸ்ஸிங்காக கோல் போஸ்ட்டின் பக்கவாட்டில் சென்றுவிட்டது பந்து.

இதேபோல் குரோஷியாவுக்கும் ஒரு வாய்ப்பு உடனேயே கிடைத்தது. அலட்சியமாக எதிரணியைக் கருதிய அர்ஜெண்டினாவின் கோல் கீப்பர் தன்னிடமிருந்த பந்தை தூக்கியடிக்காமல் அருகில் இருந்த தன் அணி வீரரிடம் தள்ளிவிட்டார்.

அந்த வீரர் எதேச்சையாக அதனை பாஸ் செய்த முயன்றபோது பந்து அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் குரோஷிய வீரரிடம் ஓட..

கடைசி நொடி குழப்பத்தில் குரோஷிய வீரர் Mandozuxic அடித்த அந்த பந்தும் கோல் வலையை ஒட்டினாற்போல் போய் குரோஷிய ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தள்ளி விடுவதற்கும், தாக்குதல் நடத்துவதற்கும் அஞ்சாமல் போய்க் கொண்டிருந்த நிலையில் முதல் மஞ்சள் கார்டை குரோஷியாவின் ரெபிக் பெற்றார்.

வலது பக்க லைன் அருகே நின்றிருந்த அர்ஜெண்டினா வீரரை தேவையே இல்லாமல் அடித்து வீழ்த்திவிட்டு தான் எதையுமே செய்யவில்லை என்று வேறு அம்பயரிடம் மூக்கோடு மூக்காக நின்று மிரட்டிவிட்டுப் போனார்.

ம்ஹூம்.. அம்பயரால் மஞ்சள் அட்டையைக் காட்டியதைத் தவிற வேறேதுவும் சொல்ல முடியவில்லை.

இடைவேளை வரையிலும் இப்படியேதான் ஷாட்டுக்களை அடிப்பதும் அது குறி தவறுவதுமாக இரண்டு அணியினருக்குமே அதிர்ஷ்டம் கையில் கிடைக்காமலேயே போய்விட்டது.

இடைவேளைக்கு பின்பு மேலும் ஆட்டம் சூடு பிடித்தது. 49-வது நிமிடத்தில் குரோஷியாவின் கோல் போஸ்ட் பகுதியில் அர்ஜெண்டினா வீரருக்கு கட்டக்கால் கொடுத்தமைக்காக மெர்க்குடா என்னும் குரோஷிய வீரருக்கு மஞ்சள் அட்டை பரிசாகக் கிடைத்தது.

இந்தச் சூடு ஆறுவதற்குள் இந்த ஷாட்டில் பறந்து வந்த பந்தை உதைத்தபடியே குரோஷிய வீரர்கள் அர்ஜெண்டினா கோல் பகுதிக்குள் கால் வைக்க தன்னை நோக்கி வந்த பந்தை அர்ஜெண்டினாவின் கோல் கீப்பர் வெகு அலட்சியமாக தனது இடது காலால் தனது அணி வீரருக்கு பாஸ் செய்வதை போல் உதைக்க..

அந்த பந்து சட்டென்று மேலே எழும்ப.. அருகில் நின்று கொண்டிருந்த குரோஷிய வீரர் ஆற, அமர பந்து கீழே வரும்வரை காத்திருந்து தனது வலது காலால் மிக அருமையாக உதைத்து அதை கோலாக்கினார்.

இதைப் பார்த்த நொடியில் அர்ஜெண்டினாவின் பயிற்சியாளர் தலையில் கை வைத்துவிட்டார். கோல் கீப்பரும்தான். ஒட்டு மொத்த அர்ஜெண்டினா ரசிகர்களும் அதிர்ச்சியாகிவிட்டார்கள். கேலரியில் அமர்ந்து தனது அணி வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த கால்பந்து கடவுள் மாரடோனாவும் திகைத்துப் போய்விட்டார்.

இது முழுக்க, முழுக்க அர்ஜெண்டினாவின் கோல் கீப்பரின் தவறுதான். வந்த பந்தை அவர் கையில் பிடித்திருந்தால் அது நிச்சயம் கோலாகியிருக்காது. அலட்சிய மனப்பான்மையுடன் பாஸ் செய்ததால் வந்த வினை இது.

இதற்கடுத்தும் குரோஷிய வீரர்கள் பதுங்கிப் பாய ஆரம்பிக்க.. அந்த அணியின் mandozuxic ஒரு மஞ்சள் அட்டையைப் பெற்றார்.

ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் குரோஷியின் கோல் போஸ்ட்டின் மிக அருகில் போய் அர்ஜெண்டினாவின் வீரர்கள் கோல் போட எத்தனிக்க கடைசி நொடியில் அது குரோஷிய வீரர்களால் முறியடிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது.

இந்த நொடியில் அந்த அணி ரசிகர்களின் முகத்தைப் பார்க்க வேண்டுமே.. ஐயோ பாவம். அதிலும் ஒரு வயது முதிர்ந்த ரசிகை கண்ணீர்விட்டு அழுதார்.

65-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் சான்ஸ் குரோஷியாவுக்கு வாய்த்தது. ஆனால் கடைசி நொடியில் அர்ஜெண்டினா வீரர்கள் ஒட்டு மொத்தமாய் பந்து மீது விழுக.. அத்திட்டம் பணாலானது.

66-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் visloka திறமையாக ஒரு அர்ஜெண்டினா வீரரை தரையில் வீழ்த்தியதற்காக மஞ்சள் அட்டையைப் பெற்றார்.

74-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் மிசா என்னும் வீரர் குரோஷிய வீரருடன் மோதியதில் இருவருக்கும் பலத்த அடி.. காயம்.. குரோஷிய வீரர் ஆட்டக் களத்திலிருந்தே வெளிநடப்பு செய்தார்.

79-வது நிமிடத்தில் மூன்று பேர் மூலமாக பாஸாகி வந்த பந்தை தொலை தூரத்தில் இருந்தே மிக அழகாக அடித்து கோலாக்கினார் குரோஷிய வீரர் மோடிக்.

அந்த பந்து அர்ஜெண்டினா கோல் கீப்பரின் கையையும் தொட்டுவிட்டு வலையின் ஓரமாக அதனை உரசிக் கொண்டே கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தது கண் கொள்ளாக் காட்சி.

ஒட்டு மொத்த அர்ஜெண்டினா ரசிகர்களும் கப்சிப். பயிற்சியாளரும், மாரடோனாவும் இந்தக் காட்சியைக் காணச் சகிக்காமல் முகத்தைப் பொத்திக் கொண்டார்கள்.

இதற்குப் பின்பு அர்ஜெண்டினா வீரர்கள் கொஞ்சம் முரட்டுத்தனத்துடன் நடந்து கொண்டார்கள். வேறு வழியில்லையே.. அவர்களும் மனிதர்கள்தானே..!

83-வது நிமிடத்தில் பந்தை கடத்தி வந்த குரோஷிய வீரரை தரையில் வீழ்த்திய அர்ஜெண்டினா வீரர்கள் பந்தின் மீது படுத்திருந்த வீரரிடத்தில் தங்களது வீரத்தைக் காட்ட.. மற்ற குரோஷிய வீரர்கள் ஓடி வந்து சவுண்டு கொடுக்க.. கை கலப்புக்கு முந்திய நிலைமைக்கு வந்து மைதானம் பதட்டமானது.

நல்ல வேளையாக நடுவர் ஓடோடி வந்து குரோஷிய வீரரை எட்டி உதைத்த அர்ஜெண்டினா வீரருக்கு மஞ்சள் அட்டை கொடுத்ததோடு ப்ரீ கிக் வாய்ப்பும் குரோஷிய அணிக்குக் கொடுத்தார். ஆனால், இந்த ப்ரீ கிக் கோல் போஸ்ட்டை தொட்டு பின்பு மைதானத்திற்குள் வந்து விழுந்து செத்துப் போனது.

86-வது நிமிடத்தில் வேறொரு அர்ஜெண்டினா வீரரும் முரட்டுத்தனத்திற்காக மஞ்சள் அட்டையைப் பெற்றார்.

அதற்குள்ளாக போட்டி நேரம் முடிய எக்ஸ்ட்ரா டைம் 4 நிமிடங்கள் கிடைத்தன.

இதில் 2-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு அம்சமான கோலை போட்டது குரோஷிய அணி. நடு மைதானத்தில் இருந்து பந்தை கடத்திக் கொண்டு வந்த குரோஷிய வீரர் கோல் போஸ்ட் அருகே வந்தபோது அர்ஜெண்டினாவின் கோல் கீப்பர் முட்டாள்தனமாக முன்னேறிச் சென்று பந்தை பிடிக்கப் போனார்.

ஆனால், அந்த வீரர் பந்தை சட்டென்று இடம் மாற்ற.. பந்து இப்போது இன்னொரு குரோஷிய வீரரிடம் ஓடியது. கோல் கீப்பர் அதிர்ச்சியாகி மீண்டும் தன் இடத்திற்கு வருவதற்குள்ளாக Ratific என்ற அந்த குரோஷிய வீரர் மிக எளிதாக கோல் போஸ்ட்டுக்குள் கோலை தள்ளிவிட.. மூன்றாவது கோலையும் போட்ட சந்தோஷத்தைக் கொண்டாடியது குரோஷியா.

கேலரியில் ஒட்டு மொத்தமாய் நிசப்தம். ஒரு சின்னப் பையன்.. அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவன்.. பட்டென்று தனது தந்தையின் மடியில் விழுந்து கதறியழுதான். பயிற்சியாளரும், மாரடோனாவும் கண்களையும், முகத்தையும் இறுக மூடிக் கொண்டனர்.

இப்படி ஒட்டு மொத்த அர்ஜெண்டினா ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது இன்றைய போட்டி..!

போட்டி முடிந்தவுடன் அம்பயரிடம்கூட கை கொடுக்க மனமில்லாமல் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி மிக வேகமாக வெளியேறினார். அவருக்கு முன்பாகவே முகத்தை மூடி அழுதபடியே வெளியேறினார் அர்ஜெண்டினாவின் பயிற்சியாளர். பாவம்..!

தாங்க முடியாத சோகம்தான். இன்றைய இரவில் அர்ஜெண்டினா நாட்டிலேயே முக்கால்வாசி பேர் தூங்க மாட்டார்கள். அப்படியொரு தோல்விதான் இது.

ஒரு கோலாவது அடித்திருக்கலாம்தான். பல முறை சான்ஸ் கிடைத்து பக்கத்தில் சென்றும் கிட்டவில்லை. ஒரு சமயம் கோல் கீப்பர் தடுத்தார். சில சமயங்களில் பந்தை பெற வேண்டிய வீரர் அந்த இடத்தில் இல்லாமல் போனார்.. பல சமயங்களில் ஷாட் குறி தவறி வெளியேறியது..

இப்படி பல்வேறு காரணங்களினால் அர்ஜெண்டினாவின் இன்றைய கோல் கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது.

அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கடந்த இரண்டு போட்டிகளிலும் ஒரு கோல்கூட போடாதது அந்த நாட்டு ரசிகர்களையும்கூட அதிர்ச்சியாக்கியிருக்கிறது.

கால்பந்து என்றாலே நினைவுக்கு வரும் அர்ஜெண்டினா முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனும்கூட..

கடைசியாக நடைபெற்ற 12 உலகக் கோப்பை போட்டிகளில் 11 போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது அர்ஜெண்டினா. 2002-ம் ஆண்டு போட்டியில் மட்டுமே பிரிவு சுற்றிலேயே வெளியேறியது. கடைசியாக விளையாடிய 15 பிரிவு சுற்று ஆட்டங்களில் 12 போட்டிகளில் வென்றுள்ளது. ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்திருந்தது. மற்ற 2-ம் டிராவானது.

கடைசியாக நடந்த மூன்று உலகக் கோப்பை போட்டிகளிலும் பிரிவுச் சுற்றில் அர்ஜெண்டினாதான் தன்னுடைய பிரிவில் முதலிடத்தில் இருந்தது.

இன்றைய போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற குரோஷியா, 4 புள்ளிகள் பெற்று முதல் 16 அணிகளில் ஒரு அணியாக குரூப் டி பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது.

தனது முதல் போட்டியில் ஐஸ்லாந்து அணியிடம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்து கொண்ட அர்ஜெண்டினா 1 புள்ளியை மட்டுமே பெற்றிருக்கிறது.

அர்ஜெண்டினா அடுத்த சுற்றுக்கு இடம் பெற வேண்டுமெனில், அடுத்து நைஜீரியாவுடன் மோதவிருக்கும் போட்டியில் அதிக கோல்களை போட்டு ஜெயித்தால்தான் உண்டு..!

ஜெயிக்கும் என்று நம்புவோமாக..!