டில்லி

வீடியோகோன் நிறுவனத்துக்கு கடன் அளித்த வங்கிக் கிளையின் மேலாளரின் கணவருக்கு தங்கள் நிறுவனங்களில் ஒன்றை வீடியோகோன் உரிமையாளர் அளித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் வருடம் வீடியோகோன் அதிபர் வேணுகோபால் தூத். ’நூ பவர் ரின்யூபல் பிரைவேட் லிமிடட்’ என்னும் நிறுவனத்தை     தீபக் கோச்சார் என்பவருடன் இணைந்து துவக்கி உள்ளார்.  தீபக் கோச்சார்  ஐசிஐசிஐ வங்கியின் மேலாளரும் நிர்வாக இயக்குனருமான சந்தா கோச்சாரின் கணவர் ஆவார்.   சந்தாவின் இரு உறவினர்களும் இந்த நிறுவனத்தின் பங்கு தாரர்களாக இருந்துள்ளனர்.    இந்த நிறுவனத்துக்கு தீபக் கோச்சார் ரூ. 64 கோடி கடன் அளித்துள்ளார்.   அதன்  பிறகு இந்த நிறுவனத்தின் முழுப் பங்குகளை தீபக் கோச்சார் தலைமைக்கு ரூ 9 லட்சம் விலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிறுவன பங்கு மாற்றத்துக்கு ஆறு மாதங்கள் முன்பு தீபக் கோச்சாரின் மனைவி சந்தா நிர்வகித்து வரும் ஐசிஐசிஐ வங்கி வீடியோகோன் நிறுவனத்துக்கு ரூ.3250 கோடி கடன் அளித்துள்ளது.    அந்தக் கடனில் ரூ.2810 கோடியை வீடியோகோன்  இன்னமும் திருப்பி செலுத்தாததால் அந்தக் கடனை ஐசிஐசிஐ வங்கி வாராக்கடனாக கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.

இந்த தகவலை ஆங்கில நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.   அத்துடன் ”தீபக் கோச்சார் – வேணுகோபால் தூத் இருவரும் சேர்ந்து தொடங்கியதாக கூறப்படும் ’நூ பவர் ரின்யூபல் பிரைவேட் லிமிடட்’ என்னும் நிறுவனம் ஏன் அடிமாட்டு விலைக்கு மாற்றப்பட்டது?   தீபக் கோச்சாரின் தந்தை மற்றும் சந்தாவின் சகோதரர் ஆகியோரின் 50% பங்குகளின் மதிப்பு மாறாமல் உள்ள போது வேணுகோபால் தூத் வைத்திருந்த பங்குகளின் மதிப்பு மட்டும் எவ்வாறு குறைந்தது?” உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி இருந்தது.

 

தீபக் கோச்சார் –                                         சந்தா கோச்சார் –                              வேணுகோபால் தூத்

அதை ஒட்டி நேற்று மாலை ஐசிஐசிஐ வங்கி ஒரு அறிக்கையை பத்திரிகைகளுக்கு அளித்துள்ளது.  அந்த அறிக்கையில், “வங்கியைப் பற்றி வரும் அனைத்து செய்திகளும் தவறானவை,   ஐசிஐசிஐ வங்கி எந்த ஒரு சலுகையும் யாருக்கும் அளிக்கபடவில்லை.   மேலும் வங்கியில் எந்த ஒரு முறைகேடும் நடைபெற வில்லை.   தேவையற்ற வதந்திகளைப் பரப்பி வங்கியின் நற்பெயரைக் கெடுக்க வேண்டாம்”  என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை எழுப்பிய தீபக் கோச்சார் – வேணுகோபால் தூத் சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்த கேள்விக்கு பதில் ஏதும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   இது குறித்து வேணுகோபால் தூத் அனைத்து பங்குகளும் சட்டத்துக்கு உட்பட்டே மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.   மேலும் தனது பங்குகளை வாங்கிய விலைக்கே விற்றதாகக் கூறி உள்ளார்.