சென்னை: போரூர் அருகே பயங்கர தீ விபத்து – 100க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம்

சென்னை போரூர் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர்.

car

சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனை அருகே ஓட்டோர் என்றழைக்கப்படும் தனியால் கால் டாக்ஸி நிறுவனத்திற்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கார் நிறுத்தம் அருகே 4 முதல் 5 ஏக்கர் பரப்பளவில் ரசாயன கழிவுகள் போடப்பட்டிருந்தன.

எதிர்பாராத விதமாக இந்த ரசாயனக்கழிவுகளில் முதலில் ஏற்பட்ட தீ மளமளவென அருகில் இருந்த கார்களில் பரவியது. தீயில் கருகியதில் ஒரு சில கார்கள் வெடித்து சிதறின. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் தீ-க்கு இரையாகின. கொளுந்து விட்டு எரிந்த தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின.

தீவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடந்து சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறை அதிகாரிகள் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பரப்பரப்புடன் காணப்படும் சென்னை நகருக்குள் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய தீ விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோன்று, பெங்களூருவில் ஏரோ இந்தியா சார்பில் நேற்று நடைபெற்ற விமான கண்காட்சியில் வாகன நிறுத்தமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.