சூரத்

பிட் காயின் எனப்படும் பணமில்லா ரொக்க வழக்கில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிரிப்டோ கரன்சி வகையைச் சார்ந்த பிட் காயின் என்பது ரொக்கமில்லா ஆன்லைன் கரன்சி ஆகும்.  இம்முறையில் அனைத்து தொகையும் ஆன்லைன் மூலமே மாற்றப்படுகின்றது.   இந்த பிட் காயினின் மதிப்பும் தினமும் மாறுதலுக்கு உள்ளாகும்.    இந்த முறையில் பல தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் தங்களின் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகார்கள் தொடங்கியதே ஒரு புகார் கடிதத்தின் மூலம்தான் என்பது குரிப்பிடத்தக்கது.   சூரத் நகரை சேர்ந்த ஒரு கட்டுமான தொழிலதிபரான சைலேஷ் பட் என்பவர் குஜராத் மாநில இணை அமைச்சர் பிரதேப்சிங் ஜடேஜாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கடிதம் எழுதினார்.  அதில் தன்னிடம் இருந்து அம்ரேலி நகர் காவல்துறையினர் ரூ.12 கோடி மதிப்புள்ள பிட் காயின்களை வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டதாக தெரிவித்தார்.

அமைச்சர் இந்த கடிதத்தை குஜராத் மாநில  சிஐடி பிரிவுக்கு அனுப்பி வைத்தார்.   அவர்கள் விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  இந்த பிட் காயின் குறித்து புகார் அளித்த சைலேஷ் பட் ஏற்கனவே பலரிடம் இருந்து பிட் காயின்களை வலுக்கட்டாயமாக வாங்கி இருந்தது  தற்போது தெரிய வந்துள்ளது.   இது குறித்து சிஐடி பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

அதில், “இரண்டு வருடங்களுக்கு முன்பு சதீஷ் கும்பானி என்பவர் ”பிட் கனெக்ட் இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி” என்னும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.  அதில் சைலேஷ் பட் போன்ற பலர் சேர்ந்தனர்.   இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு தினமும் 1% – 4% வருமானம் கிடைக்கும் என சதீஷ் அறிவித்திருந்தார்.  அதில் பட் சுமார் ரூ.2 கோடி முதலீடு செய்திருந்தார்.  கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த நிறுவனத்தினர் ஊரை விட்டு ஓடி விட்டனர்.

சைலேஷ் பட் தனது ஆட்கள் மூலம் அந்த நிறுவனத்தை சேர்ந்த இருவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளார்.  அவர்களை மிரட்டி முதலில் ரூ. 131 கோடி மதிப்புள்ள பிட் காயின்களையும் பிறகு ரூ 9.64 கோடி மதிப்புள்ள பிட் காயின்களையும் வலுக்கட்டாயமாக தங்கள் கணக்குக்கு மாற்ற வைத்துள்ளனர்.  அது தவிர ரூ. 34.5 லட்சம் ரொக்கப் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு அவர்களை விடுவித்துள்ளனர்.

இது பற்றி தெரிந்துக் கொண்ட அம்ரேலி நகர காவல்துறையினர் சைலேஷ் பட்டை மிரட்டி ரூ. 12 கோடி மதிப்புள்ள பிட் காயின்கள் மற்றும் ரூ. 60 லட்சம் ரொக்கப்பணத்தை பறித்துள்ளனர்.  அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது.   இந்த விவகாரத்தில் இதுவரை ரூ.167 கோடி மதிப்புள்ள முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது  தவிர பலர் பணமதிப்பிழப்பு சமயத்தில் பிட் காயின் மூலம் சட்டவிரோத முதலீடு செய்துள்ளதாக சந்தேகம் வந்துள்ளது.  அது குறித்து விசாரணை நடைபெறுகிறது.   அதில் இன்னும் எக்கச்சக்கமான முறைகேடுகள் வெளிவரும் என அஞ்சப்படுகிறது” என தெரிவித்துள்ளது/