சென்னை:

சீனாவிலிருந்து தமிழகம் வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த விமல் என்பவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ள கோரோனா வைரஸ், ஆயிரக்கணக்கானவர் களையும் முடக்கி உள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் தங்களது நாட்டினரை சீனாவில் இருந்து அவசரம் அவசரமாக வெளியேற்றி வருகின்றனர்.

இந்தியஅரசும், சீனாவில் உள்ளவர்களை தனி விமானம் மூலம் அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கேரளா வந்த மாணவி ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது சீனாவில் இருந்து தமிழகம் வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த விமல் என்பவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி,  கொரோனா வைரஸ் எதிரொலியாக, சீனாவில் இருந்து தமிழகம் வந்த 78 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும்,  கொரோனா வைரஸிற்கு மருந்தே இல்லை என பரவும் வத‌ந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார்.