Random image

அதிர்ச்சி அடைய வைக்கும் பெண்களின் நிலை! : ரவுண்ட்ஸ்பாய் கேள்வி ராமண்ணா கேள்வி பதில்

ரவுண்ட்ஸ்பாய்:

கும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பல்லக்கில் பவனி வந்தது சர்ச்சையை கிளப்பியிருக்கிற நிலையில், அவரது தொண்டர்கள் சிலர், “பெரியாரும் இப்படி பல்லக்கில் வந்திருக்கிறார்” என்பதாக எழுதி நியாயப்படுத்துகிறார்களே!

ராமண்ணா:

பிராமணர்கள் மட்டுமே இப்படி பல்லக்கில் பவனிவந்த காலத்தில் அதற்கு எதிரான ஒரு செயலாகவே, பெரியாரின் பல்லக்கு பவனியை கருத முடியும். பிறகு பெரியாரின் தொடர் முயற்சிகளின் விளைவாக,  இப்போது பலரும் பல்லக்கில் வரும் நிலை  ஏற்பட்டுள்ளது. (அவர்கள் சாதி, மத, இன்னபிற  மோசமான காரணங்களை வைத்தே “தலைவர்களாக” உருவாகி பல்லக்கு பவனி வருகிறார்கள் என்றாலும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அவர்கள் அப்படி பவனி வர காரணம் பெரியார்தான்.

பெரியார் நெல்லுக்கிறைத்தது புல்லுக்கும் பாய்கிறது.)

ஆக, “பார்ப்பனர்களுக்கு எதிரான குறியீடே, பெரியார் போல் கி.வீரமணியி்ன் பல்லக்கு பவனி” என்பது உப்புசப்பில்லாத வாதம். பெரியாரையும் கி.வீரமணியையும் ஒப்பிட கி.வீ. ரசிகர்களால் மட்டுமே முடியும். சராசரி அறிவுள்ளவர்களால் முடியாது.

பெரியார் செய்த இந்த பல்லக்கு பவனியை செய்வதற்கு பதிலாக, வேறு சிலவற்றை பெரியார் போலவே கி.வீரமணி செய்யலாம்.

அச்சிதழ் கோலோச்சிய காலத்தில் விடுதலை துவங்கினார் பெரியார்.

ஊடகம் கோலோச்சும் இந்தக்காலத்தில் பெரியார் தொலைக்காட்சி ஒன்றை கி.வீரமணி துவங்கலாம்.

“தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற வாசகத்தை பெரியார் இருந்தவரை தாங்கிவந்தது விடுதலை நாளிதழ். இதை மீண்டும் முகப்பில் பதிவிடலாம்.

நீட் போன்ற ஆபத்துக்களுக்கு எதிராக வலுவான போராட்டங்கள் நடத்தலாம்.

இப்படி பெரியார் போல் செய்ய கி.வீரமணிக்கு எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன  பல்லக்கை மட்டும் பிடித்துத்தொங்குவது சரியில்லை.

மனசாட்சி உள்ளோர், கி.வீரமணியின் செயலை நியாயப்படுத்தமாட்டார்கள்.

 

ரவுண்ட்ஸ்பாய்:

உங்கள் மனதைப் பாதித்த சமீபத்திய செய்திகள்?

ராமண்ணா:

இன்றைய இரு செய்திகள் மனதைப் பாதித்தன.

ஹைதராபாத்தில் ஒரு குடிமகன், போதையில் தனது குழந்தையின் கால்கலைப் பிடித்து துணி துவைப்பது போல ஆட்டோவில் தொடர்ந்து அடித்திருக்கிறார். பிறகு காவல்துறையினர் வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். நல்லவேளையாக குழந்தை உயிர் தப்பிவிட்டது.

இது ஒரு அதிர்ச்சி என்றால், இன்னொரு அதிர்ச்சி…. அந்த நபர் மீது அவரது மனைவி காவல்துறையில் புகார் அளிக்கவே இல்லை. தாங்களாகவே காவல்துறை புகார் பதிந்திருக்கிறது.

இதே போல உ.பியில் இன்னொரு சம்பவம்.

மனைவி செய்துகொடுத்த சப்பாத்தி கருகி இருந்ததால் ஆத்திரமான (இஸ்லாமிய) கணவன், முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டதாக கூறிவிட்டார். இதனால் மனைவி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் தனக்கு திருமணமாகி ஒருவருடமாகிறது என்றும் இந்த ஒருவருடத்தில் கணவன் தன்னை மிகவும் கொடுமைப்படுத்துவதாகவும் சிகரெட் நெருப்பால் பலமுறை சுட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம்.. முந்தைய சம்பவத்தில் தனது குழந்தையை கணவன் கொல்ல முயன்றபோதும் காவல்துறையில் புகார் கொடுக்க அந்தப் பெண்மணி தயாராக இல்லை. இரண்டாவது சம்பவத்தில், கணவன் தலாக் சொல்லி பிரிந்துவிட்டதாக கூறிய பிறகுதான் அவன் செய்த கொடுமைகளைச் சொல்லியிருக்கிறார் மனைவி.

அதாவது எத்தனை கொடுமைகளை அனுபவத்தாலும் கணவன் மீது புகார் சொல்லக்கூடாது, அவனைப் பிரியக்கூடாது என்கிற மனநிலேய பெரும்பாலான பெண்களுக்கு இந்தக்காலத்திலும் இருக்கின்றன.

கணவன் மட்டுமே சம்பாதிக்கும் நிலையில் குடும்பத்தின் எதிர்கால பொருளாதார நிலை என்னவாகும் என்கிற அச்சம், கணவன் மீது புகார் கூறுவதா என்கிற பெண்ணடிமைத்தனம்.. ஏதோ ஒரு காரணம் பெண்களைத் தடுக்கிறது.

பெண்களின் பரிதாபநிலை இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மாறவில்லை என்பது நம்  அனைவருக்குமே அவமானம்.

என்ன செய்யப்போகிறோம் நாம்?