‘ஞான முத்துக்கள்…’ பிரதமர் மோடி முதல் நித்தி வரை… ஒரு பார்வை…

தசார்பற்ற நாடு என்று பீற்றிகொள்ளும் நமது நாட்டில் சமீப காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் மக்களிடையே , கவலையையும்,. பதற்றத்தையும்   ஏற்படுத்தி வருகிறது…

நமது நாட்டின் உயர்ந்த தலைவர்கள், ஆன்மிகவாதிகள், அறிஞர்கள் போன்றோர் பிதற்றி வரும் ஞான முத்துக்களை பத்திரிகை.காம் இணையதளம் வாசகர்களுக்கு தொகுத்து வழங்குகிறது…..

சர்ச்சைகளும் சாமியார்களும் உடன்பிறவா சகோதரிகள் போன்றது…. சாமியார்கள் உள்ளவரை சர்ச்சைகளும் இருக்கும் என்பதை  நாம் காலம் காலமாக பார்த்தும், அறிந்தும் வருகிறோம்….

ஏற்கனவே பல்வேறு ஆன்மிகவாதிகள்- சர்ச்சைகளில் சிக்கி சீரழிந்து, சிறை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்… தன்னை கபீரின் அவதாரம் என்று பிரகடனம் செய்த அரியானாவைச் சேர்ந்த ராம்பால் , கடவுளின் மறு அவதாரம் என்று தன்னை பிரகடனப்படுத்திய இச்சாதரி சந்த் சுவாமி பீமானந்த், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபு, பிக்பாஸ் புகழ் சுவாமி சதாச்சாரி சாய் பாபா ஓம்ஜி, தேரா சச்சா சவுதாவின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்பட ஏராளமானோர் தற்போது கம்பி எண்ணிக்கொண்டு உள்ளனர்…. இவர்கள்மீது பாலியல் மற்றும் ஆயுதக்கடத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் மட்டுமே கூறப்பட்டு வந்தன.

ஆனால், சமீபகால சாமியார்களோ….. மக்களிடையே ஆன்மிகம் என்ற பெயரில் போலி மதவாத்தை பரப்பி மதத்துவேஷத்தையே விதைத்து வருகின்றனர்….. இவர்களைப் போன்றவர் களால் இந்தியாவின் இறையாண்மை கேள்விக்குறியாக்கப்பட்டு  வருகிறது…

அதேவேளையில் ஆன்மிகவாதிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அரசியல்வாதிகளும், அறிவியலாளர்களும் களத்தில் குதித்திருப்பதுதான் விந்தையாக உள்ளது….  

நமது பத்திரிகை டாட் காம் வாசர்களுக்காக இங்கே சில ஆன்மிகவாதிகள் மற்றும் பிரதமர் மோடி உள்பட பாஜக அமைச்சர்கள், எம்.பி.க்கள், அறிவியல் அறிஞர்கள் உதிர்த்துள்ள வியத்தகு வாதங்கள்…. கண்டுபிடிப்புகள்….. (அதாவது உறுதி இல்லாதவன் வாயில் இருந்து  உதிரும் உருப்படாத சொல்….) இங்கே தொகுக்கப்பட்டு உள்ளது….

நமது நாட்டில் உள்ள சர்ச்சை புகழ் பிரபல ஆன்மிகவாதிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்…..

முதலாவதாக பரபரப்பு மற்றும் சர்ச்சை புகழ் இளம்சாமியாரிணியும், பாஜக எம்.பி.யுமான  சாத்வி பிரக்யாதாகூர் என்ன கூறியிருக்கிறார் என்று பார்க்கலாம்….

இவர்மீது ஏற்கனவே குண்டுவெடிப்பு குற்றச்சாட்டு வழக்கு நிலுவையில் உள்ள  நிலையில், இவர் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இவர் தனது ஆரோக்கியத்திற்கு மாட்டு மூத்திரம் (மூத்திரம் என்பது சிறுநீர்) தான் காரணம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்…  மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேச பக்தர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியாக இருந்தபோது,, ஆயுர்வேத மூலிகைகள் கலந்த மாட்டு மூத்திரம் (மாட்டு சிறுநீர்) மற்றும் பஞ்சகவ்யா (ஐந்து மாட்டு பொருட்கள்) ஆகியவற்றை உட்கொண்டதன் மூலம் எனது புற்றுநோய் குணமானது என்று  கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்…

அடுத்ததாக மக்களின் உடல்நலத்தை யோகா மூலம் பாதுகாக்கப் போகிறேன் என்று களமிறங்கி உள்ள குரு பாபா ராம்தேவ்….

இவர் தற்போது இந்தியாவின் பெரிய தொழில்அதிபர்களில் ஒருவராக உருவாகி உள்ள பதஞ்சலி ஆயுர்வேதத்தின்  தயாரிப்புகளின் இணை நிறுவனரான பிரபல யோகாகுரு பாபாராம்தேவும் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர்தான்…

இவர், தான் செய்யும் யோகா….  செக்ஸ் கல்வியை விட சிறந்தது என்றும்,  “பள்ளிகளில் பாலியல் கல்வியை போதிப்பதை, யோகா கல்வியால் மாற்ற வேண்டும். பாலியல் கல்வி அப்பாவி சிறு குழந்தைகளின் மனதை மாசுபடுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல்,

கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததா என்று வியப்புக்குரிய வகையிலும் நகைப்புக்குரிய வகையிலும் ஒரு கருத்தை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்…

அவரது மனநிலைப்படி, “முட்டை கோழியின் பின்னால் இருந்து வருகிறதா அல்லது முன்னால் இருந்து வருகிறதா? என்று கேள்வி எழுப்பியவர்….  அது பின்னால் இருந்து வந்தால், அது மலம் தான், இல்லையா?”  மக்கள் புரதத்திற்காக ஒரு கோழியின் மலத்தை சாப்பிட வேண்டும் என்றால்…. நாமும் நம்முடையதை சாப்பிடலாம், ஏனென்றால் அதில் பல வைட்டமின்கள் இருக்கலாம் என்று தரம் தாழ்ந்து பேசியிருந்தார்…

இவருக்கு அடுத்தபடியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருபவர்  குஜராத்தின் சுவாமி நாராயண் கோயிலின் சாமியார் கிருஷ்ணா ஸ்வரூப் தாஸ்ஜி,

இவர், புதுவகையான ஒரு கருத்தைக்கூறி இந்திய பெண்களின் வெறுப்புக்கு ஆளாகி உள்ளார்…. இவர் என்ன சொன்னார் தெரியுமா?

மாதவிடாய் சமயத்தில் “கணவருக்கு உணவு சமைக்கும் பெண்கள் அடுத்த ஜென்மத்தில் நாய்களாகப் பிறப்பார்கள் என்றும், அதே சமயம், அந்த சமயத்தில்  பெண்கள் தயாரிக்கும் உணவை உட்கொள்ளும் ஆண்கள் காளைகளாகப் பிறப்பார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்…

தத்துவங்களையும் சர்ச்சைகளையும் வடநாட்டு சாமியார்கள்தான் உருவாக்கவும், தெரிவிக்கவும்  வேண்டுமா என்ன…. நாங்கள் என்ன அவர்களுக்கு சளைத்தவர்களா என்று கொடிபிடித்து வருபவர்களில் முக்கியமானவர் நமது நித்தி…..

வடநாட்டு ஆன்மிகவாதிகளுக்கும், பாரதியஜனதா தலைவர்களுக்கும் சவால்விடும் வகையில் அவ்வப்போது நக்கலாகவும், சர்சைக்குரிய வகையிலும் பேசி… தனது தனித்துவத்தை பரப்பி வருபவர்….நம்ம நித்தி…. அதாங்க நம்ம நித்தியானந்தா…….

தற்போது கைலாஷ் என்று தனிநாட்டை நிர்மாணித்து வருவதாக உதார்விட்டு வரும் இவரை காவல்துறை வலைவிசி தேடி வருவது ஒருபுறம் இருந்தாலும்… தான்தான் சிவன் என்று கூறி வீடியோ வெளியிட்டு மக்களை அதகளப்படுத்தி வருகிறார்…

இதுமட்டுமின்றி… “உங்கள் குடும்ப உறுப்பினரின் பேய் உங்கள் வீட்டில் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், பயப்பட வேண்டாம், அவர்கள் உங்களிடம் உதவி கேட்டுக்கொண்டிருக்கலாம் என்று கூறி பரபரப்பையும் பயத்தையும் உருவாக்கியது மட்டுமின்றி…. விண்ணில் மில்லியன் கணக்கான கிரகங்கள் உள்ளன, அங்குள்ள கிரகவாசிகள் பூமிக்கு கல்விச்சுற்றுலா வருகிறார்கள் என்று கூறி பரபரப்பை மட்டுமல்லாது தனது பைத்தியக்காரத்தனத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தினார்…..

மேலும், சமீபகாலமாக அவ்வப்போது வீடியோ வெளியிடும் நித்தி, சமீபத்தில்  வெளியிட்ட வீடியோவில், தமிழக காவல்துறையை நக்கலடித்தும் கலாய்த்தும்  வீடியோ வெளியிட்டது மின்றி…. திராவிடக் கட்சிகளையும் ஒரு காட்டு காட்டியுள்ளார்…

தமிழக இந்துக்களே விழித்துகொள்ளுங்கள். திராவிட ஆக்டோபஸ் இந்த அபாய ஒலி.. அபாயமணி.. உங்களை அழிக்க காத்திருக்கிறது…. இந்த அபாய செய்தி எனக்கல்ல… அது உங்களுக்குத்தான் சொக்கரும் மீனாட்சியும் என்னை காப்பாற்றி விட்டார்கள். திராவிடம் ஆக்டோபஸ் மாதிரி.  விஷத்தில் சர்க்கரை தடவி கொடுக்க கூடிய கும்பல் திராவிட கும்பல். அதற்கு தமிழ் என்ற சக்கரையை பயன்படுத்துகிறார்கள் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்….

நித்தியை திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேடிக்கொண்டு வருகிறார்கள்….

இவரைத் தொடர்ந்து, நமது ‪’காவேரி காலிங்’  புகழ் சத்குரு ஜக்கிவாசுதேவ்…

விவசாயம், விவசாயி, காவேரி என்று கூறி மக்களை திசைதிருப்பி வரும் வேளையில்…. தாய்ப்பாலில் பல வகைகள் உள்ளன என்று தெரிவித்திருப்பதுடன், அதற்கான காரணத்தையும் விளக்கி சர்ச்சையை ஏற்படுத்தினார்…

…. சரி… ஆன்மிகவாதிகள்தான் தங்களது காலங்களை ஓட்ட ஏதோ சர்ச்சைக்குரிய வகையில் பேசி… தங்களை பிரபலப்படுத்திக் கொள்கிறார்கள் என்று பார்த்தால், நமது நாட்டின் அரசியல் வாதிகளும், குறிப்பாக பாரதியஜனதா கட்சியைச்சேர்ந்த பிரதமர் உள்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பங்குக்கு பல்வேறு தத்துவங் களையும் கண்டுபிடிப்புகளையும் கூறி, நாங்களும் சாமியார்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து வருகிறார்கள்….

நாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்…

இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திரமோடி மும்பையில் நடைபெற்ற மருத்துவர்கள் மற்றும் பிற நிபுணர்களின் கூட்டத்தில் பேசும்போது…. “நாம் அனைவரும் மகாபாரதத்தில் கர்ணனைப் பற்றி படித்தோம்.  கர்ணன் தன் தாயின் வயிற்றில் இருந்து பிறக்கவில்லை என்று மகாபாரதம் கூறுகிறது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். இதன் பொருள் அந்த நேரத்தில் மரபணு அறிவியல் இருந்தது. அதனால்தான் கர்ணன் தனது தாயின் வயிற்றுக்கு வெளியே பிறக்க முடியும், கர்ணன் ஒரு ஜெனடிக் இன்ஜினியரிங்  தயாரிப்பு என்று கூறி நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்…

அதுபோல மற்றொரு நிகழ்ச்சியில் பேசும்போது….. விநாயகரின் தலை யானையின் தலையாக மாற்றப்பட்டது, அந்த காலத்தில் நடத்தப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி என்று கூறி மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்….

பிரதமரைத் தொடர்ந்து வருபவர் நமது மத்தியபாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…. இவரும்  ஆன்மிக குருக்களுக்கு போட்டியாக பல்வேறு முத்துக்களை உதிர்த்து உள்ளார்…

“மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் 80 சதவிகிதம் அளவிலே ஒரே மரபணு இருப்பதாகவும், இரண்டிற்கும் இடையில் அதிக வித்தியாசம் இல்லை, எனவே அனைத்து மாநிலங்களிலும் பசுவதைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஐந்தறிவு ஜீவனான மாட்டை மனிதனுடன் ஒப்பிட்டு பேசிய மத்திய அமைச்சரின் பேச்சு புதிய கண்டுப்பிடிப்பாகத்தான் தெரிகிறது….

மத்தியஅமைச்சரை தொடர்ந்து வருகிறார்…. மாநிலங்களுக்கான மத்தியஅமைச்சர் ஸ்ரீபாட் நாயக்…

இவர், சர்ச்சை புகழ் சாத்வி பிரக்யா தாகூரின் கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையில்,  யோகா பயிற்சி காரணமாக புற்றுநோய் உள்ளிட்ட பெரிய நோய்களைக் குணப்படுத்த முடியும் என்றும், அதற்கான ஆதாரங்களை காட்டமுடியும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல்,  “இது நிரூபிக்கப்பட்ட உண்மை என்று கூறியவர்… ஆனால், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று கையை விரித்துவிட்டார்….…

பிரதமரும், அமைச்சரும்தான் கண்டுபிடிப்புகளை வெளியிட வேண்டுமா என்ன? எனக்கும் தெரியும் என தனது பங்குக்கு அணுகுண்டை வீசினார்  உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரமேஷ் போக்கிரியால்….

எல்லா தலைவர்களுக்கும்  மேலாக விசித்திரமான கருத்தை பதிவு செய்து… தான் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்தான் என்பதை நிரூபித்து உள்ளார்…?

என்ன சொன்னார் தெரியுமா? இன்று நாம் அனைவரும் அணு சோதனை குறித்து பேசி வருகிறோம்… ஆனால்… உலக நாடுகளிலேயே இந்தியாதான் அணு தொழில்நுட்பத்தில் முன்னோடி…. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கனாட் என்ற  முனிவர் அணு சோதனை நடத்தியதாக பாராளுமன்றத்திலேயே புளுகினார்…

இவரைத்தொடர்ந்து உத்தரகாண்ட் மாநில தற்போதைய முதல்வர், திரிவேந்திரசிங் ராவத், அதிசயமான கண்டுபிடிப்பு ஒன்றை வெளிப்படுத்தி உள்ளார்.

ஆக்ஸிஜனை உள்ளிழுத்து வெளியேற்றக்கூடிய ஒரே விலங்கு பசுக்கள் மட்டுமே என்று கூறிய துடன்,   பசுவை மசாஜ் செய்வது மனிதர்களில் சுவாசப் பிரச்சினைகளை குணப்படுத்தும் என்று கூறினார். பசுவின் பால் மற்றும் சிறுநீரின் மருத்துவ குணங்களை  போற்றி பேசிய  ராவத் பசுக்களின் மூலம் காசநோயை குணப்படுத்த முடியும் என்றும் தனது கண்டுபிடிப்பை பறைசாற்றினார்….

இவருக்கும் மேலாக அண்டப்புளுகு, ஆகாசப் புளுகாக மற்றொரு கருத்தை முன்வைத்துள் ளார் முன்னாள் மத்தியஅமைச்சர் சத்யபால்சிங்…

இவரது ஆன்மிக கருத்து அனைவருக்கும் மேலானது… சார்லஸ் டார்வின் பரிணாமக் கோட்பாடு விஞ்ஞான ரீதியாக தவறானது என்று கூறி உலக அறிவியலுக்கே சவால் விடுத்தார்….  மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் என்று கூறுவது தவறு-… குரங்கு மனிதனாக மாறுவதை யாரும் காணவில்லை என்று ஒரே போடாக போட்டார்… இவர் மிகச்சிறந்த அறிவியலாளர்தான் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது….

இவர்களைப்போலவே பிரதமர் மோடி குறித்து புதிய கண்டுபிடிப்பை பறைச்சாற்றி உள்ளார்…   முன்னாள் ராஜஸ்தான் மாநில அமைச்சரும், ஆர்எஸ்எஸ் இயக்க பிரதிநிதி யுமான  வாசுதேவ் தேவ்நானி…..

புவி ஈர்ப்பு விசையை  கண்டுபிடித்தவர் ஐசாக் நியூட்டன் அல்ல…. இது உண்மையில் நியூட்ட னுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய விஞ்ஞானி  பிரம்மகுப்தாவால் கண்டு பிடிக்கப்பட்டது, அதாவது 1000 ஆண்டுகளுக்கு முன்பே என்று ஒரே போடு போட்டார்…

இவர்கள் அனைவருக்கும் முத்தாய்ப்பாக வருபவர் சர்ச்சைப் புகழ் சாக்சி மகராஜ்…. பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யான இவர்,  டில்லியில் உள்ள ஜும்மா மசூதியை இடித்து தள்ளுங்கள்.. அங்கு இந்துக் கடவுள்களின் விக்கிரகங்கள் இல்லையெனில் என்னை தூக்கிலிடுங்கள் என்று ஆவேசமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல்,  ‘‘ஷரியத் நீதிமன்றங்கள் வேண்டும் என்பவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று இனரீதியிலாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

அதுமட்டுமின்றி, அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இங்கு வாழ தகுதியற்றவர்கள்… அவர்கள் தாராளமாக பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்றும் ஆவேசமாக கர்ஜித்தவர்.

அதுபோல கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது,.   நாட்டுக்கு இதுதான் கடைசி தேர்தல் என்றும், எனக்கு நீங்கள் எனக்கு ஒட்டுப் போடவில்லை என்றால் நான் உங்களுக்குச் சாபம் விட்டு விடுவேன். அதன் பிறகு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவே இருக்க முடியாது” என்று மக்களை மிரட்டியவர்…

சரி… ஆன்மிகவாதிகளும், அரசியல்வாதிகளும்தான் ஏதோ பிதற்றிக் கொண்டு திரிகிறார்கள் என்று பார்த்தால், பிரபல பல்கலைக்கழகங்களில் பணியாற்றி வரும் அறிவியல் அறிஞர் களும் தத்துப்பித்தாக உளறி வருகிறார்கள்….

ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தரும் வேதியியல் பேராசிரியருமான  நாகேஷ்வரராவ், மகாபாரத்தில் வரும் கவுரவர்கள் 100 பேரும் சோதனைக் குழாய் குழந்தைகள் என்றும், ராவணன் 24 விமானங்களை வைத்திருந்ததாகவும் கூறி…. தனது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தினார்…

வருக்கு நான் சளைத்தவனா என்பதுபோல,  சென்னையைச் சேர்ந்த அறிவியல் கழகத்தின் விஞ்ஞானியான கே.ஜே.கிருஷ்ணன்.  ஐசக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்கள் கண்டுபிடித்த புவிஈர்ப்பு விசைகள் அனைத்தும் தவறானது என்றும், அவைகள் நரேந்திர மோடி அலைகள் என விரைவில் பெயரிடப்படும் என்று கூறி தனது ஞானத்தை வெளிப்படுத்தினார்….

அரசியல்வாதிகளும், ஆன்மிகவாதிகளும்தான் தத்துவங்கள் கூற வேண்டுமா என்ன…. எனக்கும் தெரியும் என்ற விதத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா தனது பங்குக்கு சில கருத்துக்களை தெரிவித்து உள்ளார்… அதில் முக்கியமானது மயில்கள் ஒருபோதும் ஒன்றுடன் ஒன்று கலவியில் ஈடுபடாது என்று தெரிவித்திருப்பதுடன்…. “ஒரு மயில் தனது  வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே” வாழும் என்றும் “மயில் தனது கண்ணீரை விழுங்கிய பிறகு அது கர்ப்பமாகி, பின்னர் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்று தனது ஞானத்தை உலகுக்கு பறைசாற்றி உள்ளார்…

இவர்களுக்கு எங்கிருந்துதான் ஞானம் உதிக்கிறேதோ தெரியவில்லை…

இன்றைய காலக்கட்டத்தில் தாடி வைத்தவர்களும், காவி உடை அணிந்தவர் களும், தங்களை தாங்களே ஆன்மிகவாதிகள் என்று கூறிக்கொண்டு உலா வருகிறார்கள்….

எவரொருவர் தன்னை உணர்கிறாரோ அவர்தான் உண்மையான ஆன்மிகவாதி. பலன் களை எதிர்பார்க்காமல் இன்பங்களையும், துன்பங்களையும், வெற்றி தோல்விகளையும் சமமாக ஏற்பவர் தான் உண்மையான ஆன்மிகவாதி…

இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துகின்றவரே உண்மையான  ஆன்மிகவாதி…. என்று சாத்திரங்களும், வேதங்களும் கூறுகின்றன… 

ஆனால், நமது நாட்டு ஆன்மிகவாதிகளோ…. அதற்குரிய தகுதியின்றி தங்களது வாய்க்கு வந்தபடி பேசிகொண்டு திரிகின்றனர்….

ஆனால், அன்பே சிவம் என்று கூறிய தமிழ்ப்புலவர் திருமூலர் அன்றே திருமந்திரம் என்னும் மந்திர ரகசியம் எழுதி ஆட்சியாளர்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும்  எச்சரிக்கை விடுத்துள்ளார்….

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி
மெலிந்த இனத்தினுள் வீழ்ந்து ஒழிந்தாரே!
(திருமந்திரம் – 266)

இதன் விளக்கம் என்னவென்றால்,  அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்ந்து, அனைத்து உயிர்களிடமும் அன்பும் இரக்கமும் கொண்டு மகிழ்பவர்கள், இறைவனின் திருவடி நிழலைக் காணும் பாக்கியத்தை அடைவார்கள். அவர்களுக்கு இறையருள் கிட்டும்.

உலக இன்பங்களைத் துறந்துவிடத் துணிந்து துறவு மேற்கொண்டு தவம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள். இந்த இரண்டிலும் சேராமல் உலக சுகங்களிலேயே ஆழ்ந்து, நிலையில் தாழ்ந்து இருப்பவர்கள், துணை என்று சொல்ல யாருமில்லாமல் அநாதையாக, கோபத்தீயில் வீழ்ந்து முடிந்து போவார்கள்.

ஆனால், இன்றைய அரசியல்வாதிகளும், ஆன்மிகவாதிகளும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்…… 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Baba ?Ramdev, bjp இந்துத்துவா, Hindutva gurus, Hindutva Political leaders, jakki, modi, Nithiyananda, rajathsingh, shakshi maharaj. prgyathakur, Shocking ‘words of wisdom’ from Indian Hindutva gurus  and Political leaders, சாக்ஷி மகராஜ், சாத்வி பிரக்யா தாகூர், ஜக்கி வாசுதேவ், ஞானமுத்துக்கள், நித்தி, நித்தியானந்தா, பாபா ராம்தேவ், மோடி, ராஜ்நாத்சிங், ‘words of wisdom
-=-