அதிர்ச்சி: நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்த பயணி!

டுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் கதவை திறக்க முயன்றவரால் பயணிகள் பீதி அடைந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை டில்லியில் இருந்து பாட்னாவுக்கு, ஜி8 149 என்ற எண் கொண்ட கோ ஏர் (GoAir) விமானம் பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் 150 பயணிகள் இருந்தனர்.

அப்போது பின் பக்கக் கதவின் அருகில் நின்று ஒரு பயணி அக்கதவைத் திறக்க முயற்சித்துக்கொண்டிருந்தார். இதைத் எதேச்சையாக கவனித்த மற்றொரு பயணி அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக இதை விமானப் பணிப்பெண்களிடம் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த பணிப்பெண்கள், கதவைத்திறக்க முயன்ற பயணியைப் பிடித்து தனியாக அமர வைத்தனர்

பாட்னாவில் விமானம் தரையிறங்கியதும் அந்த நபரை மத்திய தொழில் பாதுகாப்புப்படையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் காவலர்கள் விசாரித்ததில், தான் முதல் முறையாக விமானத்தில் பயணிப்பதாகவும் கழிவறைக்குப் பதிலாக விமானத்தின் கதவை தவறுதலாக திறக்க முற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இதே போன்று கடந்த 2017ம் வருடம்  ஜூன் மாதம் அமெரிக்காவில்  ஒரு சம்பவம் நடந்தது.

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இருந்து டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹவுஸ்டன் நகருக்கு சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸின் 4519 விமானம் சென்று கொண்டிருந்த போது,    விமானத்தின் எமர்ஜென்ஸி கதவை பெண் பயணி ஒருவர் திறக்க முயன்றார்.

எமர்ஜென்ஸி கதவின் ஒரு பகுதியையும் அவர் கிழித்தார்.

இதனை கண்டதும் அருகில் இருந்த பயணிகள் பீதி  அடைந்தனர். பின்னர், அருகில் இருந்த பயணிகள் விமான ஊழியர்களிடம்  தெரிவித்தனர். இதனையடுத்து விமானத்தை கார்பஸ் கிரிஸ்டி நகருக்கு பைலட் திருப்பினார். கார்பஸ் கிரிஸ்டி விமானநிலையத்திற்கு வந்தவுடன் அந்த பயணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த இரு சம்பவங்களை அடுத்து, விமானத்தில் பயணிப்பவர்களுக்கு பயணம் குறித்த  தகவல்களையும் நடந்துகொள்ளும் விதம் குறித்தும் அறிவுறுத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.