கப்பார் சிங் வேடத்தில் நடிக்கவே அமிதாப்பச்சன் விரும்பினார்’’ ’’ஷோலே’’  ரகசியங்கள் சொல்லும் டைரக்டர்….

கப்பார் சிங் வேடத்தில் நடிக்கவே அமிதாப்பச்சன் விரும்பினார்’’ ’’ஷோலே’’  ரகசியங்கள் சொல்லும் டைரக்டர்….
இந்தி சினிமா மட்டுமல்லாமல், இந்தியத் திரை உலகமே இன்றும் கொண்டாடும் திரைப்படம்-’’ ஷோலே’’.
கடந்த 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்தப்படம் வெளியானது.
ஆம்.
ரஜினிகாந்தின் ‘அபூர்வராகங்கள் ‘’ ரிலீஸ் ஆன அதே வருடம்.
ரமேஷ் சிப்பி
‘’ஷோலே’ படம் வெளியாகி 45 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், அந்த படம் உருவான விதம் குறித்து இதுவரை வெளிவராத ரகசியங்களைச் சொல்கிறார், அதன் இயக்குநர் ரமேஷ் சிப்பி:
‘’ அந்தாஸ், சீதா அவுர் கீதா அவுர் ஆகிய படங்களை இயக்கிய நான், அடுத்து ’’ஹாலிவுட்’   ரேஞ்சில் ஒரு ஆக்‌ஷன் படத்தைக் கொடுக்க ஆசைப்பட்டேன்.
அதற்கு ஏற்ற மாதிரி இரட்டை எழுத்தாளர்கள் சலீம்கான் – ஜாவேத் அக்தார் இருவரும் ’’ஷோலே’’ படத்தின் கதையைச் சொன்னார்கள்.
’’ஒன்லைன்’’ எனக்கு பிடித்துப்போனது.
அதில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்து, திரைக்கதையை உருவாக்கி, பொருத்தமான நடிகர்களை ஒப்பந்தம்  மட்டும் இரண்டு ஆண்டுகள் பிடித்தன.
1973 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி ஷுட்டிங் ஆரம்பித்து,  15-08-75 –ல் படத்தை ரிலீஸ் செய்தோம்.
நீங்கள் இப்போது பார்க்கும் கேரக்டர்களில் தான் எத்தனை, எத்தனை மாற்றங்கள்!.
தர்மேந்திரா – அமிதாப்
இந்த படத்தின் சக்தி வாய்ந்த கொள்ளையன் கப்பார் சிங், கேரக்டரில் நடிக்க முதலில் டேனியை ஒப்பந்தம் செய்திருந்தேன். அவர், பெரோஸ்கான் டைரக்ட் செய்த ‘தர்மாத்மா’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால், ’ஷோலே’ படத்தில் இருந்து விலகி விட்டார்.கதையில் அந்த கேரக்டருக்கு அதிக  முக்கியத்துவம் அளித்திருந்ததால், அமிதாப்பச்சன் தர்மேந்திரா ஆகிய இருவருமே கப்பார் சிங் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டனர்.
தங்கள் ’இமேஜ்’  காலியாகி விடும் என நினைத்து பின்னர், அந்த எண்ணத்தை கை விட்டனர்.
கப்பார் சிங் வேடத்துக்கு அம்ஜத்கானை சிபாரிசு செய்தது, எழுத்தாளர்கள், சலீமும், ஜாவேத்தும் தான். அம்ஜத் கானை, தாடி வளர்க்க சொல்லி, போட்டோ எடுத்து பார்த்தபோது, அச்சு அசலாக கப்பார் சிங் கேரக்டருக்கு பொருந்தி இருந்தார்.
சம்பல் கொள்ளையர்கள் குறித்து அப்போது எழுதப்பட்டிருந்த ஒரு புத்தகத்தைப் படித்து, தனது வேடத்துக்கு தயாராகி இருந்தார், அம்ஜத்.
இப்போது 7 வாரத்தில் ஒரு படத்தின் ஷுட்டிங்கை முடித்து விடுகிறார்கள். நாங்கள் படத்தில் இடம் பெறும் அந்த ரயில் சண்டைக் காட்சியை எடுக்க  மட்டும், ஏழு வாரங்கள் ஆனது.
இப்போது இருப்பது போல் அப்போது ‘VFX’’  போன்ற தொழில்நுட்ப வசதிகள் கிடையாது.
அம்ஜத் கான்
இருந்த வசதிகளை வைத்து வெடிபொருட்கள், துப்பாக்கி, ஸ்டண்ட் நடிகர்கள் ,குதிரைகள் என திரட்டி , ரயில் சண்டைக் காட்சியை எடுத்து முடித்தோம்.   ,
ஒட்டு மொத்த படத்தை முடிக்க 500 நாட்கள் தேவைப்பட்டது.
படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் பிரமாதமாக இருந்தது. சொல்லி வைத்த மாதிரி, எல்லா பத்திரிகைகளும் ’’படம் தேறாது’’ என்று விமர்சனம் எழுதியதால், அதிர்ச்சி  அடைந்தோம்.
பின்னாட்களில் படத்துக்கு ஏற்பட்ட வரவேற்பை நான் இப்போது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.’’
-பா.பாரதி.