சோளிங்கர்:

பிகில் படத்துக்கு தியேட்டரில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக எழுந்தபுகாரைத் தொடர்ந்து அதிரடி சோதனை மேற்கொண்ட ராணிப்பேட்டை சப்கலெக்டர், கூடுதலாக வசூலிக்கப்பட்ட  அதிக கட்டணத்தை திரும்ப கொடுக்க வைத்ததார். இந்த சம்பவம் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றுள்ளது.

தீபாவளிக்கு வெளியான விஜய் நடித்துள்ள பிகில் படத்துக்கு, தியேட்டரில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தமிழகமெங்கும் புகார்கள் கூறப்பட்டன. ஆனால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், வேலூர் அருகே உள்ள சோளிங்கரில், சப்-கலெக்டர் தியேட்டருக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்.

இதில், பிகில் படத்துக்கு  வழக்கமான வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, கூடுதல் கட்டணத்தை ரசிகர்களிடமே திருப்பி கொடுக்க தியேட்டர் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து,கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை, தியேட்டர் நிர்வாகம் ரசிகர்களுக்கு திருப்பி கொடுத்தது. இந்த சம்பவம் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளியையொட்டி கடந்த 25 ஆம் தேதி  விஜய்- நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் சிறப்புக்காட்சி தியேட்டர்களில் ஓட்ட அனுமதி வழங்கப்படாது  என்று கடைசி வரை கூறி வந்த தமிழகஅரசு, படம் வெளியாவதற்கு முந்தைய நாள் இரவு, சிறப்பு காட்சி ஓட்ட அனுமதி வழங்கியது.

இதற்கு காரணமாக, படத்திற்க அதிக கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று திரையரங்குகள் உறுதி அளித்ததால் திரைப்படங்களின்  சிறப்புக் காட்சிக்குத் தமிழக அரசு அனுமதி அளித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், வேலூர் மாவட்டம், சோளிங்கர் என்னும் பகுதியில் உள்ள தியேட்டர் ஒன்றில் பிகில் படத்துக்கு சாதாரண கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.  அதன்படி, முதல் வகுப்புக்கு ரூ.150 அதிகமாகவும், பால்கனி இருக்கைகளுக்கு ரூ.200 அதிகமாகவும், சாதாரண இருக்கைகளுக்கு ரூ.75 அதிகமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் உடனடியாக திரையரங்கிற்கு விரைந்து, திரையரங்கு உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டார். தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த வர்களிடமும் டிக்கெட்டை வாங்கி சோதனை செய்தார். இதில், அந்த தியேட்டர் அதிக கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து தியேட்டர் நிர்வாகத்தினரை கண்டித்த சப்கலெக்டர், அதிக கட்டணத்தை உடனே திருப்பி வழங்க வேண்டும் இல்லை, திரையரங்கு மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார்.

இதைத்தொடர்ந்து, தியேட்டர் நிர்வாகம், அதிகமாக வசூலிக்கப்பட்ட பணத்தை திருப்பிக் கொடுக்க சம்மதம் தெரிவித்தது.அதன்படி, படம் முடிந்து வெளியே வந்த  பார்வையாளர்களுக்கு, அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது.

சோளிங்கர் சப்-கலெக்டர்  இளம்பகவத்தின் இந்த அதிரடி நடவடிக்கை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தங்களது இந்த பணம் தீபாவளி போனஸ் என்று உற்சாகமாக கூறிச் சென்றனர். சப்-கலெக்டரின் இநத செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.