இந்தியாவுக்கு வெற்றி – சண்டிகரில் நடக்கும் துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை போட்டிகள்!

லண்டன்: வரும் 2022ம் ஆண்டு காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்தியா நடத்தவுள்ளது. காமன்வெல்த் போட்டிகளின் ஒரு பகுதியாக இவை நடத்தப்படுகின்றன.

இப்போட்டியில் வழங்கப்படும் பதக்கங்களின் எண்ணிக்கை, இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் விளையாட்டுப் போட்டியில் பங்குகொள்ளும் நாடுகளின் தரநிலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு பர்மிங்ஹாம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று முடிந்து ஒருவாரம் கழித்து, இந்தியப் போட்டிக்கான பதக்கங்கள் இறுதி எண்ணிக்கையில் சேர்க்கப்படும். காமன்வெல்த் கேம்ஸ் ‍ஃபெடரேஷன் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

காமன்வெல்த் கமிட்டியின் இந்த முடிவு இந்தியாவுக்கான பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், காமன்வெல்த் போட்டியில், துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வில்வித்தை ஆகியவை முக்கியப் பட்டியலில் சேர்க்கப்படாமல் விருப்பத் தேர்வாக வைக்கப்பட்டிருந்தன.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, 2022 பர்மிங்ஹாம் போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வில்வித்தைப் போட்டிகள், சண்டிகரில் 2022ம் ஆண்டில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

அதே ஆண்டு ஜுலை & ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியும், இந்தியாவின் சண்டிகர் போட்டியும், தனித்தனியாக நடத்தப்படும் போட்டிகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.