அமெரிக்கா விஸ்கான்ஸ் மாகாண வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் காயம்

விஸ்கான்ஸ்: அமெரிக்காவில் விஸ்கான்ஸ் மாகாணத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் சிறுவன் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

விஸ்கான்சின் மாகாணத்தில் வாவாடோசா நகரின் புறநகர்ப் பகுதியில் பிரபல (Mayfair mall) வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்துக்கு வந்திருந்த ஒருவர், ஒரு கடையின் முன் திடீரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில், அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த பலர் காயமடைந்துள்ளனர். பலர் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வணிகவளாகத்தை சுற்றி வளைத்தனர். அதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் உள்பட 8 பேரை மீட்ட காவல்துறையினர், அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  . இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, வணிக வளாகத்தைக் காவல் துறை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. குற்றவாளியைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மறு அறிவிப்பு இன்றி வணிக வளாகம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.