கோயம்பேட்டில் அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்திய வணிகருக்கு கொரோனா… அதிகாரிகள் பீதி…

சென்னை: 

கோயம்பேட்டில் கொரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடைகளை அடைப்பது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்திய வணிகருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், அன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

அவர்களுக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையின் பிரபலமான கோயம்பேடு சந்தையில் வணிகர்களும் பொதுமக்களும் கொரோனா சமூக விலகலை கடைபிடிக்காததால், அங்கு கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து, அங்குள்ள கடைகளை மூடிவிட்டு, வேறு இடத்துக்கு தற்காலைகமாக மாற்றுவது குறித்து  அரசு அதிகாரிகள், வணிகர்களுடன் பேச்சு வார்ததை நடத்தினர்.

அந்த ஆலோசனை கூட்டத்தில், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர்  விவாதித்தனர்.

இந்த நிலையில், தற்போது இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வணிகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற வணிகர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அரசு அதிகாரிகளும் பீதியில் உறைந்துள்ளனர். அவர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.