சென்னை:

ச்சநீதி மன்றம்  அளித்த தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் 3ந்தேதி கடையடைப்பு நடத்தப்படும் வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்து உள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில்  வரும் 3ந்தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அன்று தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று விக்கிரமராஜா அறிவித்து உள்ளார்.

காவிரி நதி நீர் தொடர்பான மேல்முறையீடு வழக்கில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த 6 வார காலக்கெடு 29ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளது.

அதைத்தொடர்ந்து,   தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 3ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் அதிமுக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வணிகர்கள் கடை அடைப்பு நடத்துவதாக அறிவித்து உள்ளனர்.

ஆனால், வணிகர்கள் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் இன்னும், இதுகுறித்து எந்தவித அறிவிப்பு வெளியிடவில்லை.