தமிழிசை சென்ற விமானத்தில் நடந்தது என்ன ? ஷோபியாவின் தந்தை விளக்கம்
தூத்துக்குடி
பாஜக தலைவர் தமிழிசையிடம் ஒரு பெண் கோஷம் போட்டு தகராறு செய்த விவகாரம் குறித்து பெண்ணின் தந்தை விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து சென்ற விமானத்தில் உடன் பயணித்த தூக்குடியை சேர்ந்த கனடாவில் வசிக்கும் பெண் பாஜகவை எதிர்த்து கோஷம் இட்டதால் இருவருக்கும் இடையில் தகராறு எழுந்துள்ளது. அதை ஒட்டி தமிழிசை அளித்த புகாரின் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து காவல் துறைக்கு அந்தப் பெண் ஷோபியாவின் தந்தை ஏ ஏ சாமி என்பவர் தூத்துக்குடி காவல் ஆய்வாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டது பின் வருமாறு :
ஐயா,
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் தேவேந்திர குல சமுதாயத்தை சார்ந்தவன். நான் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்து வருகிறேன்.
எனது மகள் லூயிஸ் ஷோபியா கனடாவில் ஆராய்ச்சி மாணவியாக கல்வி பயின்று வருகிறார். எனது மகள் கடந்த 30.8.2018 அன்று கனடாவில் இருந்து சென்னை வந்தார். நானும் எனது மனைவியும் சென்னையில் இருந்து எனது மகளை அழைத்துக் கொண்டு இன்று 3.9.2018 காலை 11.30 மணி அளவில் இண்டிகோ விமானத்தில் நான், எனது மனைவி, மகள் மூவரும் தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கினோம். நாங்கள் வந்த அதே விமானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் அவர்கள் வந்தார்கள். விமானத்தில் இருந்து இறங்கும் போது என் மகள் பாஜக அரசை கண்டித்து முழக்கமிட்டார்.
இதனைக் கேட்ட பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் அவர்கள் அப்போது எதுவும் சொல்லாமல் விமானநிலையத்தில் பயணிகள் அமரும் கூடத்திற்கு வந்ததும் அங்கிருந்த தனது கட்சி தொண்டர்களை தூண்டி விட்டார். அவரது தூண்டுதலால் சுமார் 10க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் எங்களை பார்த்து, வெளியே விடாமல் மறித்துக் கொண்டு,எனது மகளைப் பார்த்து, “தேவடியா, வெளியே வா. உன்னைக் கொல்லாமல் விட மாட்டோம்” என மிரட்டினார்கள். அப்போது உடனிருந்த மேற்படி பாஜக தொண்டர்கள் என்னையும் எனது மகளையும் மிரட்டினார்கள்.
அங்கிருந்த தொண்டர்களிடம் இவளையும் இவள் குடும்பத்தையும் சும்மா விடக்கூடாது என மிரட்டினார்கள். மேலும் அங்கிருந்த தொண்டர்கள் என்னையும் எனது மகளையும் எனது மனைவியையும் சட்டத்திற்கு புறாம்பாக புகைப்படம் எடுத்தார்கள். இதனால் நானும் எனது குடும்பத்தாரும் மிகுந்த மனவேதனையும், மன உளைச்சலும், மிகுந்த அச்சமும் அடைந்து காணப்பட்டு வருகிறோம்.
ஆகவே உயர்திரு ஆய்வாளர் அவர்கள் என்னையும் எனது குடும்பத்தினரையும் வழிமறித்து எனது மகளை அசிங்கமாக பேசி எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மன வேதனையையும் உயிரபாயத்தையும் ஏற்படுத்திய மேற்படி பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி தங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்”
என எழுதி உள்ளார்.