புதுச்சேரி:

கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புதுச்சேரியிலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4314 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 118 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கணிசமான மக்கள் ஊரடங்கை மதிக்காமலும் சமூக விலக்கை கடைபிடிக்காமலும் நடந்துகொள்வதால் தமிழகத்தில் சமீபத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகளைத் திறக்கும் நேரம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

 

இந்நிலையில் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புதுச்சேரியிலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் தெரிவித்துள்ள தகவலில், ‘புதுச்சேரியில் இனி காய்கறி, மளிகை கடைகள், பெட்ரோல் பங்க்குகள், இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மதியம் 2.30 வரை அத்தியாவசிய கடைகள் செயல்பட்ட நிலையில் மேலும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.