திருவனந்தபுரம்:

பெரும்பான்மை இல்லாததால் கேரளா அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் முதல்வரின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த 9ம் தேதி 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கேரளா கவர்னர் சதாசிவம் ஒப்புதலுக்கு அனுப்புவதற்காக அவசர அமைச்சரவை கூட்டத்துக்கு முதல்வர் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். முதல்வர் பினராய் விஜயன் உள்பட மொத்தம் 19 அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் உள்பட 6 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

கூட்டம் நடத்துவதற்கு ஏற்ப பெரும்பான்மையான உறுப்பினர்கள் இல்லை. இதனால் வேறு வழியின்றி அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வாரத்தில் 5 நாட்கள் தலைநகரில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்கட்சிகளான காங்கிரஸ், பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிர்கட்சி தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், ‘‘அமைச்சரவையில் முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அதிர்ச்சியான சூழ்நிலை இதற்கு முன்பு ஏற்பட்டது கிடையாது. நிர்வாக பொறுப்புகளை விட கட்சி கூட்டங்களில் கலந்துகொள்வதில் தான் அமைச்சர்கள் ஆர்வமாக உள்ளனர்’’ என்றனர்.

2016ம் ஆண்டு மே மாதம் பினராய் விஜயன் பதவி ஏற்றபோது வாரத்தில் 5 நாட்கள் அமைச்சர்கள் தலைநகரில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பின்னர் இது 4 நாட்களாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.